மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
ஆனபய பத்திவழி பாடுபெறு முத்தியது
வாகநிகழ் பத்தசன வாரக் காரனும் (1)
ஆரமது ரித்தகனி காரணமு தற்றமைய
னாருடனு ணக்கைபரி தீமைக் காரனும் (2)
ஆகமம்வி ளைத்தகில லோகமு நொடிப்பளவில்
ஆசையொடு சுற்றுமதி வேகக் காரனும் (3)
ஆணவஅ ழுக்கடையும் ஆவியை விளக்கியநு
பூதியடை வித்ததொரு பார்வைக் காரனும் (4)
ஆடலைவு பட்டமரர் நாடதுபி ழைக்கஅம
ராவதிபு ரக்குமடல் ஆண்மைக் காரனும் (5)
ஆடகவி சித்ரகன கோபுரமு கப்பில்அரு
ணாபுரியில் நிற்கும்அடை யாளக் காரனும் (6)
ஆயிரமு கத்துநதி பாலனும கத்தடிமை
யானவர் தொடுத்தகவி மாலைக் காரனும் (7)
ஆறுமுக வித்தகனும் ஆறிருபு யத்தரசும்
ஆதிமுடி வற்றதிரு நாமக் காரனும் (8)
யானெனதெ னச்சருவும் ஈனசம யத்தெவரும்
யாரும்உணர் தற்கரிய நேர்மைக் காரனும் (9)
யாதுநிலை யற்றலையும் ஏழுபிற விக்கடலை
யேறவிடு நற்கருணை யோடக் காரனும் (10)
ஏரகம் இடைக்கழிசி ராமலைதி ருப்பழநி
யேரணிசெ ருத்தணியில் வாசக் காரனும் (11)
ஏழையின் இரட்டைவினை யாயதொரு டற்சிறையி
ராமல்விடு வித்தருள்நி யாயக்காரனும் (12)
யாமளைம ணக்குமுக சாமளைம ணிக்குயிலை
யாயெனஅ ழைத்துருகு நேயக் காரனும் (13)
ஏதமற நிச்சயம னோலயவி ளக்கொளியும்
யாகமுநி வர்க்குரிய காவற் காரனும் (14)
ஈரிரும ருப்புடைய சோனைமத வெற்பிவரும்
யானையள விற்றுவளும் ஆசைக் காரனும் (15)
ஏடவிழ்க டப்பமலர் கூதளமு டிக்கும்இளை
யோனும்அறி விற்பெரிய மேன்மைக் காரனும் (16)
வானவர்பொ ருட்டுமக வானதுபொ ருட்டுமலர்
வாவியில்உ தித்தமுக மாயக் காரனும் (17)
வாரணப திக்குதவு நாரணனு வக்குமரு
மானும்அய னைக்கறுவு கோபக் காரனும் (18)
வாழியென நித்தமற வாதுபர விற்சரண
வாரிசம்அ ளிக்கும்உப காரக் காரனும் (19)
மாடமதில் சுற்றியத்ரி கூடகிரி யிற்கதிர்செய்
மாநகரி யிற்கடவுள் ஆயக் காரனும் (20)
வாளெயிற துற்றபகு வாய்தொறுநெ ருப்புமிழும்
வாசுகியெ டுத்துதறும் வாசிக் காரனும் (21)
வாளகிரி யைத்தனது தாளிலிடி யப்பொருது
வாகைபுனை குக்குடப தாகைக் காரனும் (22)
மாசிலுயி ருக்குயிரு மாசிலுணர் வுக்குணர்வும்
வானிலணு வுக்கணுவு பாயக் காரனும் (23)
வாதனைத விர்த்தகுரு நாதனும்வெ ளிப்படம
காடவியில் நிற்பதொர்ச காயக் காரனும் (24)
மீனவனு மிக்கபுல வோருமுறை பொற்பலகை
மீதமர்த மிழ்த்ரயவி நோதக் காரனும் (25)
வேரிமது மத்தமதி தாதகிக டுக்கைபுனை
வேணியர்து திப்பதொரு கேள்விக் காரனும் (26)
வேலைதுகள் பட்டுமலை சூரனுடல் பட்டுருவ
வேலையுற விட்டதனி வேலைக் காரனும் (27)
மீனுலவு கிர்த்திகைகு மாரனுநி னைக்குமவர்
வீடுபெற வைத்தருள்உ தாரக் காரனும் (28)
மேனையரி வைக்குரிய பேரனும தித்ததிறல்
வீரனும்அ ரக்கர்குல சூறைக் காரனும் (29)
வேதியர்வெ றுக்கையும்அ நாதிபர வஸ்துவும்வி
சாகனும்வி கற்பவெகு ரூபக் காரனும் (30)
வேடுவர்பு னத்திலுரு மாறிமுனி சொற்படிவி
யாகுலம னத்தினொடு போம்விற் காரனும் (31)
மேவியபு னத்திதணில் ஓவியமெ னத்திகழு
மேதகு குறத்திதிரு வேளைக் காரனே. (32)
பதம் பிரித்தது
ஆன பயபத்தி வழிபாடு பெறு முத்தி அதுவாக
நிகழ் பத்தசன வாரக்காரனும் (1)
ஆர மதுரித்த கனி காரணம் உதற்று தமையனாருடன்
உணக்கை பரி தீமைக்காரனும் (2)
ஆகமம் விளைத்த அகில லோகமும் நொடிப்பளவில்
ஆசையொடு சுற்றும் அதி வேகக்காரனும் (3)
ஆணவ அழுக்கு அடையும் ஆவியை விளக்கி அநுபூதி
அடைவித்ததொரு பார்வைக்காரனும் (4)
ஆடு அலைவு பட்ட அமரர் நாடு அது பிழைக்க
அமராவதி புரக்கும் அடல் ஆண்மைக்காரனும் (5)
ஆடக விசித்ர கன கோபுர முகப்பில் அருணாபுரியில்
நிற்கும் அடையாளக்காரனும் (6)
ஆயிர முகத்து நதி பாலனும் அகத்து அடிமையானவர்
தொடுத்த கவி மாலைக்காரனும் (7)
ஆறுமுக வித்தகனும் ஆறு இரு புயத்து அரசும்
ஆதி முடிவற்ற திரு நாமக்காரனும் (8)
யான் எனது எனச் சருவும் ஈன சமயத்து எவரும்
யாரும் உணர்தற்கு அரிய நேர்மைக்காரனும் (9)
யாது நிலை அற்று அலையும் ஏழு பிறவிக் கடலை
ஏற விடு நல் கருணை ஓடக்காரனும் (10)
ஏரகம் இடைக்கழி சிரா மலை திருப் பழநி
ஏர் அணி செருத்தணியில் வாசக்காரனும் (11)
ஏழையின் இரட்டை வினை ஆயதொரு உடல் சிறை இராமல்
விடுவித்து அருள் நியாயக்காரனும் (12)
யாமளை மணக்கும் முக சாமளை மணிக் குயிலை
ஆய் என அழைத்து உருகு நேயக்காரனும் (13)
ஏதம் அற நிச்சய மனோலய விளக்கு ஒளியும்
யாக முனிவர்க்கு உரிய காவற்காரனும் (14)
ஈர் இரு மருப்பு உடைய சோனை மத வெற்பு இவரும்
யானை அளவிற் துவளும் ஆசைக்காரனும் (15)
ஏடு அவிழ் கடப்ப மலர் கூதளம் முடிக்கும் இளையோனும்
அறிவில் பெரிய மேன்மைக்காரனும் (16)
வானவர் பொருட்டும் மகவானது பொருட்டும் மலர்
வாவியில் உதித்த முக மாயக்காரனும் (17)
வாரண பதிக்கு உதவு நாரணன் உவக்கும் மருமானும்
அயனைக் கறுவு கோபக்காரனும் (18)
வாழி என நித்தம் மறவாது பரவின் சரண
வாரிசம் அளிக்கும் உபகாரக்காரனும் (19)
மாட மதில் சுற்றி அத்ரி கூட கிரியில் கதிர் செய்
மா நகரியில் கடவுள் ஆயக்காரனும் (20)
வாள் எயிறு அது உற்ற பகு வாய் தொறும் நெருப்பு மிழும்
வாசுகி எடுத்து உதறும் வாசிக்காரனும் (21)
வாள கிரியைத் தனது தாளில் இடியப் பொருது
வாகை புனை குக்குட பதாகைக்காரனும் (22)
மாசு இல் உயிருக்கு உயிரும் மாசு இல் உணர்வுக்கு உணர்வும்
வானில் அணுவுக்கு அணு உபாயக்காரனும் – (23)
வாதனை தவிர்த்த குருநாதனும் வெளிப்பட மகா
அடவியில் நிற்பது ஓர் சகாயக்காரனும் – (24)
மீனவனும் மிக்க புலவோரும் உறை பொற் பலகை
மீது அமர் தமிழ் த்ரய விநோதக்காரனும் – (25)
வேரி மது மத்தம் மதி தாதகி கடுக்கை புனை
வேணியர் துதிப்பது ஒரு கேள்விக்காரனும் – (26)
வேலை துகள் பட்டு மலை சூரன் உடல் பட்டு உருவ
வேலை உற விட்ட தனி வேலைக்காரனும் – (27)
மீன் உலவு கிர்த்திகை குமாரனும் நினைக்கும் அவர்
வீடு பெற வைத்து அருள் உதாரக்காரனும் – (28)
மேனை அரிவைக்கு உரிய பேரனும் மதித்த திறல்
வீரனும் அரக்கர் குல சூறைக்காரனும் – (29)
வேதியர் வெறுக்கையும் அநாதி பர வஸ்துவும்
விசாகனும் விகற்ப வெகு ரூபக்காரனும் – (30)
வேடுவர் புனத்தில் உரு மாறி முனி சொற்படி
வியாகுல மனத்தினொடு போம் விற்காரனும் (31)
மேவிய புனத்து இதணில் ஓவியம் எனத் திகழும்
மேதகு குறத்தி திரு வேளைக்காரனே. (32)