மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
பகலிர வின்றியொர் புகல்திசை நந்திய பற்பா னுத்தகை
படமுதல் விசும்பு தூர்த்த டுக்கு பிணமலை (1)
பவுரிவ ரும்பரி புரநரல் பங்கய வித்தா ரத்தன
பயிரவி பதங்கள் வாழ்த்தெ டுத்த பசியன (2)
பரியகொ ழுந்தசை பயிரவர் என்றுப லிக்கா நிற்பவர்
பகரிடம் அறிந்து பாத்தி ரத்தில் இடுவன (3)
பரவிவ ருங்குறள் பசிதணியும்படி பட்டார் கைப்படு
பரிசையின் முகந்து சூட்டி றைச்சி சொரிவன (4)
படுகள மென்பதொர் செறுவில் விளைந்தன பற்கோ வைப்பயில்
பவுரிவி சைகொண்டு தீட்டி மெத்த அடுவன (5)
பரியணி திண்பணை முடியம டிந்துடல் பப்பா தித்துணி
படவிழு பெருங்கை மாக்க ருக்கல் பகிர்வன (6)
படைவிச யந்தெரி சலதிவ லம்புரி பற்றார் பட்டுள
பலபல விதங்கள் ஆர்ப்பெ டுக்கும் உதடின (7)
பகடுபி ளந்ததன் உரிவைபு னைந்திடு குப்பா யத்தன
பதவிய ரிணஞ்செ யூட்டு டுத்த வுடையின (8)
உகமுடி வன்றினும் வெருவவ ரும்பல உற்பா தத்தன
ஒளிமதி வகிர்ந்த கீற்றெ யிற்று நிலவின (9)
உருவம் இருண்டன திகிரிவி லங்கலின் உட்பாய் கிற்பன
உலவிநி ணமொண்டு கூட்ட மைத்து நுகர்வன (10)
உததியு றுஞ்சுவ வடவைநெ டுங்கனல் உட்கா கப்பெரு
குதிரபி சிதங்கள் பேர்த்தி றக்கி யிடுவன (11)
உருமுமி டைந்தென அதிர்குர லின்றமில் ஒப்பே றிட்டுநி
ருதர்மவு லிகொண்டு கோட்டை யிட்டு மலைவன (12)
உலகுகு லுங்கிட அரியது ணங்கையி னைச்சா திப்பன
உவணப டலங்கள் காக்கை சுற்றி வருவன (13)
உலைதரு மென்குட ரிடைபட இந்திர னுத்யா னத்தலர்
உகிரகொடு புனைந்த சூட்டு முற்றி மலைவன (14)
உயரிப முங்குர கதகுல முங்கன பொற்றேர் வர்க்கமும்
உடைபடு கலங்கள் போற்சு ழித்து விரைபட (15)
ஒழுகுதி ரந்தனின் முழுகியெ ழுந்தன உச்சா டத்துடன்
உடைகடல் அதிர்ந்து கூப்பி ளக்கு நடையின (16)
செகதலம் எங்கணும் அதிரமு ழங்கிய டிப்பாய் வெற்றிய
திரள்வரை பிடுங்கி நாட்டி யொட்டு குழையின (17)
சினமலி வெங்குறள் இனமொடு திண்டிறல் மற்போர் கற்பன
திசையள வுநின்று நீட்டி வைக்கும் அடியின (18)
திசைகள்தொ றும்பல குறைகள் எழுந்துது டித்தா டச்சிறை
செறிகழு கரங்கில் வீற்றி ருக்கும் அரசின (19)
திமிரபி லங்கிழி படவிசை கொண்டுகு தித்தா லிப்பன
சிகரவ டகுன்றி னூற்றி ரட்டி நெடியன (20)
சிறியன கிண்கிணி யணிகுரு வின்சர ணத்யா னத்தின
திசைபட அகண்ட சீர்த்தி மெச்சி யிரைவன (21)
திமிலைபெ ரும்பறை சிறுபறை நின்றதி ரச்சே வித்துயர்
சயமகள் விளங்கு வேற்க ரத்தை மொழிவன (22)
திரிகட தொங்கிட திரிகட திங்கிட தித்தீ செக்கண
செககண மொழிந்து கூத்த னைத்து நவில்வன (23)
சிலைமலி திண்புய அசுரர்சி ரங்கள் அடுப்பா வைத்தவர்
செறிகுடர் நிணங்கள் காய்ச்சி மிக்க அயில்வன (24)
நிகரில் அறம்புரி குருகல பஞ்சவர் மெய்த்தூ துக்கொரு
நிமிடம திலன்று போய்க்க வித்த மணிமுடி (25)
நிருபர்ப யங்கொள நெறுநெ றெனும்படி பொற்பீடத்திடை
நிலைபெற இருந்து நூற்று வர்க்கும் அவரறி (26)
நினைவுற வன்புறும் ஒருபதி னெண்குண அக்ரோ ணிப்படை
நிகிலமு மடிந்து கூற்று வற்கு நிறைவுற (27)
நிலமகள் வன்பொறை கடியுமு குந்தன்மு தற்சேண் முட்டவு
நெறிபட நிமிர்ந்த ஆக்கை யற்கு மருமகன் (28)
நிமலைத்ரி யம்பகி கவுரிதி கம்பரி நிர்ப்பா வக்குண
நிருமலி யிரங்கு தாய்ப்ரி யத்தன் அறுமகன் (29)
நிகரக னங்குல சிகரிதொ டும்பெரு வெற்பார் உற்பல
நிறையருவி கொஞ்ச ஓச்சி யத்தில் ஒளிர்சுனை (30)
நியதியின் நன்கலர் தணிகைஎ னும்பதி நிற்பான் முற்பட
நெடுமகர சிந்து தீப்ப றக்க வெகுவித (31)
நிபுடது ரங்கக சவிரத சங்க்ரம நிட்டூ ரக்கொலை
நிருதரை முனிந்த போர்க்க ளத்தில் அலகையே. (32)
பதம் பிரித்தது
பகல் இரவு இன்றி ஓர் புகல் திசை நந்திய பல் பானுத் தகை
பட முதல் விசும்பு தூர்த்து அடுக்கு பிண மலை (1)
பவுரி வரும் பரிபுர நரல் பங்கய விஸ்தாரத்தன
பயிரவி பதங்கள் வாழ்த்து எடுத்த பசியன (2)
பரிய கொழுந் தசை பயிரவர் என்று பலிக்கா நிற்பவர்
பகரிடம் அறிந்து பாத்திரத்தில் இடுவன (3)
பரவி வரும் குறள் பசி தணியும்படி பட்டார் கைப்படு
பரிசையின் முகந்து சூட்டு இறைச்சி சொரிவன (4)
படுகளம் என்பது ஓர் செறுவில் விளைந்தன பல் கோவைப் பயில்
பவுரி விசைகொண்டு தீட்டி மெத்த அடுவன (5)
பரி அணி திண் பணை முடி அமடிந்து உடல் பப்பாதித் துணி
பட விழு பெருங் கை மா கருக்கல் பகிர்வன (6)
படை விசயம் தெரி சலதி வலம்புரி பற்றார் பட்டுள
பல பல விதங்கள் ஆர்ப்பு எடுக்கும் உதடின (7)
பகடு பிளந்து தன் உரிவை புனைந்திடு குப்பாயத்தன
பதவி அரிணம் செய் ஊட்டு உடுத்த உடையின (8)
உக முடிவு அன்றினும் வெருவ வரும் பல உற்பாதத்தன
ஒளி மதி வகிர்ந்த கீற்று எயிற்று நிலவின (9)
உருவம் இருண்டன திகிரி விலங்கலின் உள் பாய்கிற்பன
உலவி நிணம் மொண்டு கூட்டு அமைத்து நுகர்வன (10)
உததி உறிஞ்சுவ வடவை நெடுங் கனல் உட்காகப் பெருகு
உதிர பிசிதங்கள் பேர்த்தி றக்கி யிடுவன (11)
உருமும் மிடைந்து என அதிர் குரலின் தமில் ஒப்பு ஏறிட்டு
நிருதர் மவுலி கொண்டு கோட்டை இட்டு மலைவன (12)
உலகு குலுங்கிட அரிய துணங்கையினைச் சாதிப்பன
உவண படலங்கள் காக்கை சுற்றி வருவன (13)
உலைதரு மென் குடர் இடைபட இந்திரன் உத்யானத்து அலர்
உகிர் கொடு புனைந்த சூட்டு முற்றி மலைவன (14)
உயர் இபமும் குரகத குலமும் கன பொன் தேர் வர்க்கமும்
உடைபடு கலங்கள் போல் சுழித்து விரைபட (15)
ஒழுகு உதிரந்தனில் முழுகி எழுந்தன உச்சாடத்துடன்
உடை கடல் அதிர்ந்து கூப் பிளக்கு நடையின (16)
செகதலம் எங்கணும் அதிர முழங்கி அடிப்பாய் வெற்றிய
திரள் வரை பிடுங்கி நாட்டி ஒட்டு குழையின (17)
சினம் மலி வெங் குறள் இனமொடு திண் திறல் மற்போர் கற்பன
திசை அளவு நின்று நீட்டி வைக்கும் அடியின (18)
திசைகள் தொறும் பல குறைகள் எழுந்து துடித்து ஆடச் சிறை
செறி கழுகு அரங்கில் வீற்று இருக்கும் அரசின (19)
திமிர பிலம் கிழிபட விசை கொண்டு குதித்து ஆலிப்பன
சிகர வட குன்றின் நூற்று இரட்டி நெடியன (20)
சிறியன கிண்கிணி அணி குருவின் சரண த்யானத்தின
திசைபட அகண்ட சீர்த்தி மெச்சி இரைவன (21)
திமிலை பெரும் பறை சிறுபறை நின்று அதிரச் சேவித்து உயர்
சய மகள் விளங்கு வேல் கரத்தை மொழிவன (22)
திரிகட தொங்கிட திரிகட திங்கிட தித்தீ செக்கண
செககண மொழிந்து கூத்து அனைத்தும் நவில்வன (23)
சிலை மலி திண் புய அசுரர் சிரங்கள் அடுப்பா வைத்து அவர்
செறி குடர் நிணங்கள் காய்ச்சி மிக்க அயில்வன (24)
நிகர் இல் அறம் புரி குரு குல பஞ்சவர் மெய்த் தூதுக்கு ஒரு
நிமிடமதில் அன்று போய்க் கவித்த மணி முடி (25)
நிருபர் பயம் கொள நெறுநெறு எனும்படி பொன் பீடத்திடை
நிலைபெற இருந்து நூற்றுவர்க்கும் அவர் அறி (26)
நினைவுற அன்புறும் ஒரு பதின் எண் குண அக்ரோணிப் படை
நிகிலமும் மடிந்து கூற்றுவற்கு நிறைவுற (27)
நிலமகள் வன் பொறை கடியும் முகுந்தன் முதல் சேண் முட்டவும்
நெறிபட நிமிர்ந்த ஆக்கையற்கு மருமகன் (28)
நிமலை த்ரியம்பகி கவுரி திகம்பரி நிர்ப்பாவக் குண
நிருமலி இரங்கு தாய் ப்ரியத்தன் அறுமகன் (29)
நிகர் அகனம் குல சிகரி தொடும் பெரு வெற்பார் உற்பல
நிறை அருவி கொஞ்ச ஓச்சியத்தில் ஒளிர் சுனை (30)
நியதியின் நன்கு அலர் தணிகை எனும் பதி நிற்பான் முற்பட
நெடு மகர சிந்து தீப் பறக்க வெகு வித (31)
நிபுட துரங்க கச ரத சங்க்ரம நிட்டூ ரக் கொலை
நிருதரை முனிந்த போர்க்களத்தில் அலகையே. (32)