ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆராரோ ஆராரோ
வள்ளி என்றால் வள்ளி மலை மேல் படரும் வள்ளி
கொடியில் கிடந்து வள்ளி கூவி அழும் போது
வனத்து குறவர்களாம் மான் பிடிக்கும் வேடர்களாம்
குழந்தை குரல் கேட்டு குறவேடர் ஓடிவந்து {1}
மதலை குரல் கேட்டு மான்வேடர் ஓடிவந்து
வாரி எடுத்து வண்ண மடியில் வைத்து
தூக்கி எடுத்து சொர்ண மடியில் வைத்து
மண்துடைத்து மடியில் வைத்து வள்ளியென்று பேரும் வைத்து {2}
வடிவேல் துணையென்று வளர்த்தார் வனத்தினிலே!
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆராரோ ஆராரோ
காடுவெட்டித் தீக்கொளுத்தி மேடுபள்ளம் செப்பனிட்டு
தின்னத் தினைவிதைத்து – வள்ளி தேமொழியை காவல் வைத்தார் {3}
அறுக்கத் தினைவிதைத்து – வள்ளி அருங்கிளியைக் காவல் வைத்தார்
உழக்குத் தினைவிதைத்து – வள்ளி ஓடிக் கிளிவிரட்டி
நாழித் தினைவிதைத்து – வள்ளி நடந்து கிளிவிரட்டி
துருணித் தினைவிதைத்து – வள்ளி கூவிக் கிளிவிரட்டி {4}
பதக்குத் தினைவிதைத்து – வள்ளி பாடிக் கிளிவிரட்டி
ஆலோலம் என்று சொல்லி – வள்ளி அழகாய்க் கிளிவிரட்டி
அறுக்கப் பதமாச்சே – வள்ளி அருங்கிளியால் காத்ததினை!
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆராரோ ஆராரோ {5}
சுப்பையா உன்றனுக்குச் தோதான வள்ளியென்று
ஷண்முகா உந்தனுக்குச் சரியான வள்ளியென்று
வீணைக்கொண்ட நாரதரும் வேலவர்க்குச் சொல்லிவிட்டார்
தினைப்புனமும் காத்து வள்ளி திகைத்து நிற்கும் வேளையிலே {6}
வனத்திருக்கும் வேடரைப்போல் – சுப்பையா வந்தாராம் மாலையிட
தேனும் திணைமாவும் தெவிட்டாத வேலவரும்
பாலும் தினைமாவும் பசியாற வந்தாராம்
புள்ளிமான் புகுந்ததென்று – சுப்பையா புகுந்தார் தினைப்புனத்தே {7}
வள்ளிமான் வந்ததென்று – சுப்பையா வந்தார் வனத்தினிலே
வெள்ளிமலை தெற்கே விராலிமலை தென்மேற்கே
கல்லுமலைக் குள்ளிருந்து கதிர்வேலர் ஓடிவந்து
வள்ளிதனை மாலையிட வந்தார் வனத்தருகே! {8}
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆராரோ ஆராரோ
வண்டாடப் பூமலர – வள்ளி வனங்காக்கக் கண்டாரோ ?
வள்ளி அழகுக்கும் – வள்ளி வலதுகைத் தேமலுக்கும்
கன்னத்து மஞ்சளுக்கும் – சுப்பையா கண்டாசை கொண்டாரோ ! {9}
உட்கழுத்து மஞ்சளுக்கும் – சுப்பையா உள்ளாசைப் பட்டாரோ !
கூந்தல் அழகுக்குச் – சுப்பையா குறவேசம் ஆனாரோ ?
ஓடினாள் வள்ளி ஒளிந்தால் வனந்தேடி
தேடினார் வேல்முருகர் – வள்ளி திருவடியைக் காணாமல் {10}
வருந்தினார் முருகர் – வள்ளி வடிவழகைக் காணாமல் !
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆராரோ ஆராரோ
நல்ல கிழவனைப்போல் – சுப்பையா நடித்தாராம் தினைப்புனத்தில்
மெத்தப் பசிக்குதென்று – சுப்பையா வித்தை மெத்தச் செய்தாராம் {11}
தேனும் தினைமாவும் – வள்ளி சேர்த்துக் கொடுத்தாளாம்
தாக மெடுக்குதென்று சுப்பையா சாலங்கள் செய்தாராம்
தேன்குடிக்கத் தந்தாளாம் தேன்மொழியாள் வள்ளியரும்
அதையும் குடிக்காமல் – சுப்பையா அழைத்தாராம் சுனையருகே {12}
கூட்டி நடந்தாளாம் கொம்பனையாள் வள்ளியரும்
ஆட்டங்கள் ஆடிச் – சுப்பையா ஆரணங்கைக் கூவினராம்
ஏதோ சிரமமென்று எடுத்தணைத்தால் தோகையவள்
கன்னி கை கொடுத்தாளாம் – சுப்பையா தோளோ டணைத்தாராம் {13}
காட்டிலே வாழுகின்ற கன்னி வள்ளி நாயகிக்கு
எதைக்கண்டால் பயமென்றார் ஏந்திழையால் வள்ளியர்க்குக்
கரடிப்புலி சிங்கமென்றால் கடுகளவும் பயமறியாள்
ஆனையென்று சொன்னால்தான் அதிகப் பயமுண்டு {14}
கொடிபடர்ந்த வள்ளியர்க்குக் கொண்டுவந்தார் வெள்ளானை
காட்டானைக் காட்டி சுப்பையா கலியாணம் செய்துகொண்டார்
அண்ணாவைத் தானினைத்து ஆரணங்கை மாலைகொண்டார்
கொண்டார் மனைவியாய்க் கூட்டிவந்தார் தன்னருகே {15}
கிள்ளு வளையலிட்டுச் – சுப்பையா கிளிமொழியை மாலையிட்டார்
பச்சை வளையலிட்டு – சுப்பையா ஆரணங்கை மாலையிட்டார்
மாலையிட்ட மன்னவராம் – சுப்பையா பசுங்கிளியை மாலையிட்டார்
சேலை விழியிலிட்டாள் சுப்பையா தேர்ந்தெடுத்த பெண்சாதி {16}
வள்ளிதெய் வானையுடன் சுப்பையா வருவார் மயில்மீது
அள்ளி அருள்பொழிவார் சுப்பையா அனைத்துலகும் இன்பமுறும்! (2)
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆராரோ ஆராரோ {17}