067 – பரஞ்சுடர்க்கண்ணி

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

ஆரணமு மாகமமு மங்கிங் கெனாதுபரி
பூரணமாச் சொல்லும் பொருளே பரஞ்சுடரே. – (1)

அறிஞருரை யின்பொருளே யவ்வறிஞர் நாடும்
சிறுமையற்ற சுத்த சிவமே பரஞ்சுடரே. – (2)

வித்தைமுனி யாஞ்சேது மாதவனென் வேதியனென்
சித்தமுணர்ந் தெற்களித்த தேனே பரஞ்சுடரே. – (3)

எப்பா ருளாரு மிறைஞ்சும் பலமதங்கட்
கப்பா லிருக்கு மறிவே பரஞ்சுடரே. – (4)

என்று மருவாக வென்று முருவாக
என்றுங் குருவா யிருக்கும் பரஞ்சுடரே. – (5)

இருவினைக் கட்டொழிந்த வேகாந்த மோன
குருபர மாயசிவக் குன்றே பரஞ்சுடரே. – (6)

பிருந்த மலப்பிணியைப் பேதித்துப் போக்கும்
மருந்தீ மருத்து மலையே பரஞ்சுடரே. – (7)

பேரறிவு தோன்றப் பிடித்தபிடி யிற்கிடக்கும்
ஓரறிஞர் கட்கருளின் பூட்டும் பரஞ்சுடரே. – (8)

அயன்மா லதீத ரறவோர்க்கு ஞான
மயமாய்முன் னிற்கு மணியே பரஞ்சுடரே. – (9)

மாதவர்க ளாறுபெயர் கட்கும் வனப்பொதிய
நாதனுக்குந் தீக்கைசெய்த நட்பே பரஞ்சுடரே. – (10)

மூவுலகு மெச்சு முசுகுந்த னக்கீர
தேவனுய்ய நல்லருள்செய் தேவே பரஞ்சுடரே. – (11)

ஈனவிட யங்கடவை யெய்தாம னீத்தபரா
தீன ரெடுத்தருந்து தேனே பரஞ்சுடரே. – (12)

சிறிதும் பெரிதுமிலாத் தேசநடை நாடும்
அறிஞ ருளத்தின் பமுதே பரஞ்சுடரே. – (13)

மாவடியை நாடி வழிபட்டு நிற்பவருட்
கோவிறனில் வாழுங் குருவே பரஞ்சுடரே. – (14)

ஆலடியை நாடி யனுதினமு நிற்குமருட்
கோலவடி யார்கள் குருவே பரஞ்சுடரே. – (15)

வாகையடி நாடி மலந்துமித்த முத்தருடைத்
தேகநழு வாதருந்து தீயே பரஞ்சுடரே. – (16)

தென்னையடி நாடித் தியக்கோய்ந் திருப்பவர்கள்
தந்நினைவி னிற்குந் தருக்கே பரஞ்சுடரே. – (17)

உடையடியை நாடி யுணர்வுற்றோர் நெஞ்சத்
திடையுறையு மானந்த வின்பே பரஞ்சுடரே. – (18)

மாட்டடியை நாடி மறவா திருப்போருள்
வீட்டி லிருக்கும் விளக்கே பரஞ்சுடரே. – (19)

ஆட்டடியை நாடி யலுத்துறங்கி நிற்குநரைக்
காட்டிக் கொடுக்கவுள்ள கண்ணே பரஞ்சுடரே. – (20)

பரியடியை நாடிப் பதைப்போவ நிற்போர்
கரிசறுக்க வுள்ள கருத்தே பரஞ்சுடரே. – (21)

சேவலடி நாடித் தியங்கா திருப்பவருட்
பூவிலுறை கின்றவரும் புள்ளே பரஞ்சுடரே. – (22)

அடியா மருளை யடைந்தவடி யாருட்
குடியா யிருக்குங் குகனே பரஞ்சுடரே. – (23)

என்றா யுதரத் திருந்தகா லந்தொடங்கி
ஒன்றாக நிற்கு முயிரே பரஞ்சுடரே. – (24)

பாவிற்று வாழ்பவர்போற் பாடாது பாடுநர்தந்
நாவிற் குடியிருக்கு நட்பே பரஞ்சுடரே. – (25)

தொண்டனேன் சூழ்வதுபோற் றூவின் பெனக்குமெனை
அண்டினவர் கட்கு மருளும் பரஞ்சுடரே. – (26)

வெள்ளக் கடன்மீன்போல் வெய்திருந்துஞ் சேராமல்
உள்ளொளியா நாளு மொளிரும் பரஞ்சுடரே. – (27)

துன்பத் திடையழுத்துந் துன்பச் செயலனைத்தும்
துன்பமென நீக்கத் துணைநீ பரஞ்சுடரே. – (28)

பொய்யாகும் வாழ்க்கைதனைப் போக்கி யுனையடைவான்
ஐயா வுனைப்பணிய லானேன் பரஞ்சுடரே. – (29)

மட்பூமி மிக்குடையோர் மண்ணிலுற்ற தீவினையை
மட்பூமி கொண்டோ மறுப்பார் பரஞ்சுடரே. – (30)

தங்கம்பொன் மிக்குடையோர் தாஞ்செய்த தீவினையைத்
தங்கம்பொன் கொண்டோ தடுப்பார் பரஞ்சுடரே. – (31)

மாடகூ டங்களுளோர் மண்ணகன்று போங்காற்பின்
மாடகூடங்கள் வருமோ பரஞ்சுடரே. – (32)

தண்டிகைபல் லக்குடையோர் தாம்படும் பாசறையைத்
தண்டிகைபல் லக்குவந்தோ தாங்கும் பரஞ்சுடரே. – (33)

சேனைதள முள்ளோரைத் தேடி நமன்பிடித்தால்
சேனைதளம் யுத்தஞ் செயுமோ பரஞ்சுடரே. – (34)

பெண்டுபிள்ளை சுற்றமிகப் பெற்றோர் படுந்துயரிற்
பெண்டுபிள்ளை சுற்றநின்றோ பேணும் பரஞ்சுடரே. – (35)

வாய்வலிமை யுள்ளோர் மறலிவிடுங் கட்டளையை
வாய்வலிமை கொண்டோ மறுப்பார் பரஞ்சுடரே. – (36)

மந்திரஞ்சாச் சித்திபெற்ற மக்களயர் தீவினையை
மந்திரஞ்சாக் கொண்டோ மறுப்பார் பரஞ்சுடரே. – (37)

செத்த வுயிரெழுப்பத் தேர்ந்த மருத்துவரும்
சித்தத் தியக்கறுத்துய் வாரோ பரஞ்சுடரே. – (38)

கரும்பொன்னைச் செம்பொனெனக் கட்டிடவல் லோரும்
அருஞ்சிறை நீங்கியிங்குய் வாரோ பரஞ்சுடரே. – (39)

உன்னுமனம் வாக்குடம்பா னுற்ற பவமலையை
உன்னருட்சம் மட்டி யுடைக்கும் பரஞ்சுடரே. – (40)

பாராளு மன்னவர்க்கும் பங்கயவங் காற்கருணை
வாரா துணர்வும் வருமோ பரஞ்சுடரே. – (41)

வீராதி வீரரென விஞ்சுபவர்க் குங்கருணை
வாரா துணர்வும் வருமோ பரஞ்சுடரே. – (42)

கார்நேர் கவிஞருக்குங் கட்டார் திருக்கருணை
வாரா துணர்வும் வருமோ பரஞ்சுடரே. – (43)

சீராருஞ் செல்வத் திருவடிக்கா ருண்ணியவோம்
வாரா துணர்வும் வருமோ பரஞ்சுடரே. – (44)

பகட்டிப் பகட்டிநிதம் பார்த்திடுமொய் யாரம்
அகற்றி யிருக்க வருளாய் பரஞ்சுடரே. – (45)

துக்க மெனுந்திடரைத் தூற்றிச் சமனாக்கும்
அக்கரையே மாப்பை யளியாய் பரஞ்சுடரே . – (46)

பெண்சாதி பிள்ளையெனும் பித்தேறிச் சாகாமற்
கண்சாடை செய்தே கடத்தாய் பரஞ்சுடரே. – (47)

பெண்ணேக்க மென்னும் பிசாசம் பிடித்தலைத்துப்
புண்ணாக்கா வண்ணம் புரப்பாய் பரஞ்சுடரே. – (48)

ஆகாக் கவலையெல்லா மாகாம லேசாவ
ஆகுங் கவலை யருளாய் பரஞ்சுடரே – (49)

முக்கால முந்தெரிந்து மோன மதுவருந்தற்
கெக்கால முந்துணையா யெய்தாய் பரஞ்சுடரே. – (50)

அபமிருத்துக் காலமிருத் தாமிரண்டுங் காணாச்
சுபவிருத்தர் கூடருளைத் தூண்டாய் பரஞ்சுடரே. – (51)

பிறப்புளதேற் குண்டலிபாற் பேணவளி யின்றேல்
இறப்பிலருட் சத்தியிட மீயாய் பரஞ்சுடரே. – (52)

மாயா மனத்துடிப்பு மாயும் படிக்கெனொரு
தாயான வன்பையினித் தாராய் பரஞ்சுடரே. – (53)

இந்திரியப் பேய்க ளெனைத்தொந் தரிக்காமல்
சந்ததமு நன்னாட்டந் தாராய் பரஞ்சுடரே. – (54)

எண்ணேறி யுள்ளே யிருக்குங் கவலையெல்லாம்
மண்ணாக வுள்ளே மடக்காய் பரஞ்சுடரே. – (55)

அறன்கடை வேட்கை யவித்துநடு நோக்கில்
உறங்கியுறங் காதிருக்க வுன்னாய் பரஞ்சுடரே. – (56)

கவலைச் செழும்பெருங் காட்டைக் கனற்ற
மவுனச்செந் தீயை வளர்த்தாய் பரஞ்சுடரே. – (57)

சோபான மோர்நான்கிற் றோகமற்ற வீறாகும்
மாபோக சன்மார்க்க வாழ்வீ பரஞ்சுடரே. – (58)

எவ்வுலகு மீன்ற வெழிலம்மை நன்னடனம்
எவ்விதமுங் காண்பா னிணைப்பாய் பரஞ்சுடரே. – (59)

உத்தமர்க ளென்று முனைக்குரங்கி நிற்குநறுஞ்
சித்ரமணி மன்றுட் செலுத்தாய் பரஞ்சுடரே. – (60)

தீயிலிழி செம்புருக்கிச் செம்பொன்னாத் தானெடுக்கத்
தாயென்னு மோர்குருவைத் தாராய் பரஞ்சுடரே. – (61)

ஊக்கச் சுழிக்காற் றுழலணுவை யேயகண்டம்
ஆக்குமொரு வித்தை யருளாய் பரஞ்சடரே. – (62)

பத்தவிடர் சான்ற பசுவைப் பரமாக்கும்
அத்துவித வித்தை யருளாய் பரஞ்சுடரே. – (63)

ஆதாரப் பண்புணர்த்தி யப்பான்முப் பாழ்கடத்தி
மீதானத் துள்ளிருத்தி மேவாய் பரஞ்சுடரே. – (64)

படுத்த படுக்கையிலே பால்வாய்ப் படற்கோ
எடுத்தேனித் தேக மியம்பாய் பரஞ்சுடரே. – (65)

வலிப்பிளைப்பு விக்கலெழ மால்விழிகள் சோரத்
தலைப்புரட்டல் கொள்ளத் தகுமோ பரஞ்சுடரே – (66)

தலைப்புரட்டல் கொண்டே தடிபோற்கை கால்போய்க்
குலைப்புரட்டல் கொள்ளல் குணமோ பரஞ்சுடரே. – (67)

கொண்டபன்னி பாலாழக் கூடுமுற வோர்களழக்
குண்டலிமே னோக்கல் குணமோ பரஞ்சுடரே. – (68)

நோக்கி யெழுந்துநெஞ்சி னோவுறுத்தி மேலிழுக்க
ஏக்கங்கொண் டேக லிதமோ பரஞ்சுடரே. – (69)

இதயந் தனைவிட் டெழுந்துகளந் தாண்ட
அதிக மிழுத்தலமை வாமோ பரஞ்சுடரே. – (70)

இழுத்தடைத் திந்திரிய மெல்லா மயர்ந்தே
கழுத்துணங்கி வீழ்தல் கதியோ பரஞ்சுடரே. – (71)

அழுதழுது னைத்தேடி யம்புவியோர் கூடி
அழுநெறிக்கோ நானுமினி யாவேன் பரஞ்சுடரே. – (72)

கெடுங்குவ்வோ ராக்கை கிடத்திக் கிடத்திச்
சுடுங்கா டெனக்குத் தொலைகாண் பரஞ்சுடரே. – (73)

வீணாளர் போக்கும் விகற்பமும் பாற்றியகம்
கோணாம னிற்பதெந்நாள் கூறாய் பரஞ்சுடரே. – (74)

என்னோ டிருந்துமெனக் கேபகைஞ ராவாரை
என்னோ டிணக்கிவைப்ப தெந்நாள் பரஞ்சுடரே. – (75)

புன்மனதுக் கும்மெனக்கும் போராட்ட மாயிருக்கும்
சென்மவழக் கென்றுநன்காத் தீரும் பரஞ்சுடரே. – (76)

சோதி துலங்காமற் சூழ்ந்த மலத்தினுக்கோர்
பேதி வருவதெந்நாள் பேசாய் பரஞ்சுடரே. – (77)

உள்ளவுண்மை காட்டா தொளித்த விருட்டினுக்கோர்
கொள்ளை வருவதெந்நாள் கூறாய் பரஞ்சுடரே. – (78)

மோசம் விளைத்தெனையே மூடு மிருட்டினுக்கோர்
நாசம் வருவதெந்நா ணட்பே பரஞ்சுடரே. – (79)

அலையுமெனைத் தான்காட்டா வாணவக்கங் குற்கோர்
தொலைவு வருவதெந்நாள் சொல்லாய் பரஞ்சுடரே. – (80)

நாடு மெனைமறைத்து நானென் மலத்தினுக்கோர்
கேடுவந்த தாகவென்று கேட்பேன் பரஞ்சுடரே. – (81)

கள்ள மெனும்பொருளைக் காணாம லேதிருடும்
கள்ளவரு ளெய்துவதெக் காலம் பரஞ்சுடரே. – (82)

தேசிகனா முன்றன் றிருவருளி லேதிளைத்துத்
தாசரதர் நிற்பதெந்நாள் சாற்றாய் பரஞ்சுடரே. – (83)

நித்திரையை நித்தநெட்டி நித்திரையை நித்தமொட்டி
எத்திசையுங் கூடிநிற்ப தெந்நாள் பரஞ்சுடரே. – (84)

எப்பொருளி னுஞ்சார்ந் திருக்கு மெதார்த்தமதை
எப்பொழுது காண்பே னியம்பாய் பரஞ்சுடரே. – (85)

காணக் கிடையாக் கனியைப் புசிக்கவருள்
பேணிக் கொடுப்பதெந்நாள் பேசாய் பரஞ்சுடரே. – (86)

காயில்லாத் தேங்கனியைக் கள்ளில்லாக் கள்ளதனை
ஈயில்லாத் தேனையுண்ப தெந்நாள் பரஞ்சுடரே. – (87)

ஆசைவலை யிற்கிடந்தே யல்லலுறு வாரசடர்
தாசன் கிடக்கத் தகுமோ பரஞ்சுடரே. – (88)

மெய்யான வாசைவந்து மேவி வலித்தலினாற்
பொய்யான வாசையிலே போகேன் பரஞ்சுடரே. – (89)

பெற்றமுலை விட்டுநுகர் பெற்றிவந்த பின்னினைக்க
வற்றியவ திற்பால் வருமோ பரஞ்சுடரே – (90)

நிலம்பொன் பவுள் செதற்கு நின்னை நினைத்தே
புலம்பும் பவுள்செனக்குப் போதும் பரஞ்சுடரே. – (91)

என்ன சுகங்கருதி யென்னதொழி லாற்றிடுவேன்
உன்னைத் தொழுவதினி யொன்றே பரஞ்சுடரே. – (92)

மெய்யருட்டேட் டுக்காக விட்டேன் பொருட்டேட்டும்
மெய்யருளெய் தாதேலென் செய்வேன் பரஞ்சுடரே. – (93)

அருளும் பொருளுமற்றா லாண்டிப் பிணம்போல்
உருள்வதன்றி யுய்யுநெறி யுண்டோ பரஞ்சுடரே. – (94)

எக்காலும் பெட்டகத்தி லுள்ளபொரு ளென்றிருந்தால்
எக்காலு மாக்கை யிராதே பரஞ்சுடரே. – (95)

கற்றமுட்டா ளென்றேயிக் காசினியோ ரேசாமல்
முற்றுமுற்றா னென்றே முடிப்பாய் பரஞ்சுடரே. – (96)

இகழ்ந்திகழ்ந் தென்னைமுட்டா ளென்றாலு முன்னைப்
புகழ்ந்தமுட்டா ளென்பதுவும் பொய்யோ பரஞ்சுடரே. – (97)

பிள்ளைகுற்றஞ் செய்தாற் பிதாபொறுத்துக் கொள்வதல்லால்
தள்ளி விடுவதுண்டோ சாற்றாய் பரஞ்சுடரே. – (98)

வெல்லப்பா னைக்குளத்தம் விட்டோர் விரல்சுவைப்பார்
அல்லவோ வத்துணையு மின்றோ பரஞ்சுடரே . – (99)

ஈசா வுனைப்பணிந்து மேத மடச்சகுந்தம்
ஆசையுட னுண்ணுபிண மானேன் பரஞ்சுடரே. – (100)

வயங்குசிவ நாடா மடிக்கிருமி தொள்ளற்
கயர்ந்துகிடக் குங்குணப மானேன் பரஞ்சுடரே. – (101)

மடக்கி மடக்கிவரு மாதர் மயற்பேய்
அடித்துமிசை யுங்குணப மானேன் பரஞ்சுடரே. – (102)

துங்கமற்ற வுண்டியுண்டு சூழ்படிற்றுப் பேழ்க்காகம்
அங்கலாய்த் துண்ணுபிண மானேன் பரஞ்சுடரே. – (103)

வஞ்சனைபொச் சாப்பெனுங்கோ மாயு விலாப்புடைக்க
அஞ்சா தருந்துபிண மானேன் பரஞ்சுடரே. – (104)

திண்டுமிண்டர் செய்கையிலே செல்லுமிந்தி யப்பருந்திங்
கண்டிவிழுந் துண்ணுபிண மானேன் பரஞ்சுடரே. – (105)

ஓவலற வாங்கவலை யென்னுநா யூன்கொழுக்க
ஆவலற வுண்ணுபிண மானேன் பரஞ்சுடரே. – (106)

வாடாம லேவளர்ந்து மல்குபிணி யாயவெள்ளா
டூடாடுங் காடாக வுற்றேன் பரஞ்சுடரே. – (107)

ஏய்க்குமன மாமாயை யென்னுமுழு மாங்காய்கள்
காய்க்குமர மானேனென் கண்ணே பரஞ்சுடரே. – (108)

தேனைப் பழித்தவின்பந் தேடா மடமையெனும்
பூனைக்கு முன்னெலியாப் போனேன் பரஞ்சுடரே. – (109)

காயுலக மிச்சையெனக் கண்டுமுல கிச்சையெனும்
ஈயலெழும் புற்றா யிருந்தேன் பரஞ்சுடரே. – (110)

மோகனமில் வாலாமை மூதேவி யேறிடற்கு
வாகனம தாக வளர்ந்தேன் பரஞ்சுடரே. – (111)

காலைநடு மாலை கதிக்கும் பிணிகளெனும்
ஆலைநனி யாட்டிடுமெள் ளானேன் பரஞ்சுடரே. – (112)

உண்டியிடும் பண்டிதனை யுற்ற புலையுடம்பாம்
வண்டிக்கு மாடாக வாய்த்தேன் பரஞ்சுடரே. – (113)

தெட்டுத் தொழின்மூலந் தேடும் பொருளிடற்குப்
பெட்டகம தானேன் பிரானே பரஞ்சுடரே. – (114)

மிடியுஞ் செடியுநல்கும் வெய்யபவ மென்னும்
கொடிபடர் கொம்பானேன் கோனே பரஞ்சுடரே. – (115)

கருங்குவளைக் கண்ணார்தங் காமக் கலக்கப்
பருந்தெடுத்த குஞ்சாய்ப் பதைத்தேன் பரஞ்சுடரே – (116)

பட்சமற்ற பாழ்த்தநெஞ்சம் பண்ணுமுர ணாலரசுப்
பட்சியின்முன் சிட்டாய்ப் பதைத்தேன் பரஞ்சுடரே. – (117)

உருக்க விரக்கமிலா துள்ளமுடைக் கள்வர்
இருக்கும் பொதும்பானே னெந்தாய் பரஞ்சுடரே. – (118)

ஆசு மனச்சுழிக்கா லாலே சுழலுகின்ற
தூசாகி னேனே சுவாமீ பரஞ்சுடரே. – (119)

ஓடியுழல் சிந்தையினா லோயாம லேகறங்கி
ஆடுங் கறங்கெனவிங் கானேன் பரஞ்சுடரே. – (120)

நாட்ட மனங்குவிய நானறியேன் பூட்டைதனில்
ஆட்டிடுங் கொட்டையென வானேன் பரஞ்சுடரே. – (121)

ஏறுசல மோடழுக்கா றென்னுமுள் ளூற்றுநிதம்
ஊறுமசும் பானே னுயிரே பரஞ்சுடரே. – (122)

சூழு முரட்டாட்டத் தோஷக் கொடுவிலங்கு
வாழுமடர் காடானேன் மன்னே பரஞ்சுடரே. – (123)

ஈனமுற்ற வுன்மத்த மென்னு மதம்பொழியும்
ஆனைகட்டு கின்றதறி யானேன் பரஞ்சுடரே. – (124)

திடனொடு சந்ததமுஞ் சீறுஞ் சினப்பாம்
படையுஞ் சிறுகூடை யானேன் பரஞ்சுடரே . – (125)

ஆன்ற தவப்பயிர்கொல் லாங்காரத் தீப்பூடு
தோன்றுநில மானேன் சுவாமீ பரஞ்சுடரே. – (126)

எஞ்சா மமகார மென்னும் பெரும்புலிக்குப்
பஞ்சரம தாகப் படிந்தேன் பரஞ்சுடரே. – (127)

இருள்பகலென் றோத விருக்குந் திறத்தான்
இருதலைக் கொள்ளியெறும் பானேன் பரஞ்சுடரே. – (128)

அரிய திருவருளா மன்னைதன்னைக் காணா
தெரியினுரை யொத்தே னெளியேன் பரஞ்சுடரே – (129)

கணக்கிலருள் வாரிதியைக் காணாது வெய்யோன்
மணற்கிருமி யொத்தேனென் வாழ்வே பரஞ்சுடரே. – (130)

தேம்பித்தேம் பிச்சிறந்த சீரருளைக் காணாது
பாம்பின்வாய்த் தேரையொத்தேன் பாராய் பரஞ்சுடரே. – (131)

போக்குவர வைக்கெடுக்கும் பொன்னருளைக் காணாது
தேக்கிலையி னீர்போற் றிகைத்தேன் பரஞ்சுடரே. – (132)

நிலையான பேரருளா நின்மலத்தைக் காணா
தலைவாய்த் துரும்பேய்ப்ப வானேன் பரஞ்சுடரே. – (133)

சோகத்தை நீக்குமருட் டூமுகிலைக் காணாது
நாகக்கை மாலையொத்தே னட்பே பரஞ்சுடரே. – (134)

தருக்கருளைக் காணாது சாத்திரக்கோ ளோரா
துரைப்பார்தம் வாயுரையை யொத்தேன் பரஞ்சுடரே. – (135)

அட்டகுணத் துன்பே ரருணலத்தைக் காணாதிங்
கொட்டுதளை விட்டசெய்யு ளொத்தேன் பரஞ்சுடரே. – (136)

கவ்வருளைக் காணாது காண்டல் சுருதியுத்தி
ஒவ்வாத புத்தகத்தை யொத்தேன் பரஞ்சுடரே. – (137)

திக்கனைத்தும் போற்றுந் திருவருளைக் காணாமல்
அக்கினிபற் றுங்கூள மானேன் பரஞ்சுடரே. – (138)

உண்மையரு ளின்றுயர்நூ லோதினவர் தீமைவிடா
தொண்மையறம் விட்டதர மொத்தேன் பரஞ்சுடரே. – (139)

சீகரமுந் நீர்நடுவிற் செல்லுமம்பிப் பாய்மரத்தின்
காகத்தை யொத்தேனென் கண்ணே பரஞ்சுடரே. – (140)

பொக்குவிட யத்திலவாப் பூக்கும் புலைஞரிடம்
சிக்கிய மான்போற் றிகைத்தேன் பரஞ்சுடரே. – (141)

முட்டமுட்டத் தீவினையின் மொய்த்தகரை யார்வலையிற்
பட்டசிறு மீன்போற் பதைத்தேன் பரஞ்சுடரே. – (142)

கலிக்குதவு கின்றகருங் காளியம்மை கோவிற்
பலிக்கடாப் போலும் பதைத்தேன் பரஞ்சுடரே. – (143)

அரிக்கள் ளினைக்குடித்தே யாடுமடப்
பேய்வாய்ப் பொரிக்கறியை யொத்தேனென் பொன்னே பரஞ்சுடரே. – (144)

கட்டுக் கடங்காத கானப் புலவேடர்
தொட்டசெருப் பாகித் துவண்டேன் பரஞ்சுடரே. – (145)

நித்த விறப்புவெந்நோ நீங்காப் பிணியாளர்
சித்தத்தை யொத்தேனென் றேவே பரஞ்சுடரே. – (146)

கோவணத்தைத் தான்றரித்துங் கொள்கைகெட்ட வஞ்சகர்கைத்
தாவடத்தை யொத்தேன்மெய்ச் சத்தே பரஞ்சுடரே. – (147)

புல்லருந்தி வாழாட்டைப் புல்லறைந்து தின்பதுபோல்
அல்லகண்ட மென்னையுண்ண லாமோ பரஞ்சுடரே. – (148)

கொள்ளி மனமறுகிற் கூடுதுன்பக் குப்பைகளை
அள்ளியெறி யத்துணைநீ யாவாய் பரஞ்சுடரே. – (149)

காக்கைவிழி யாளரைப்போற் கண்ணகன்று நில்லாமல்
யோக்கியனென் றாநிலைமைக் குன்னாய் பரஞ்சுடரே. – (150)

நீக்கினு நீங்காத நீர்ப்பாசி யாம்வெளிற்றைப்
போக்குநிஜ மார்க்கம் புகலாய் பரஞ்சுடரே. – (151)

அளிக்கும் பொருளையளி யாதுகரு மண்ணை
அளிக்கும் விதநா னறியேன் பரஞ்சுடரே. – (152)

பத்தாறு தேசும் பரவ விளங்கிடும்வீ
பத்துமுகங் காணவிருப் பங்காண் பரஞ்சுடரே – (153)

உண்டையங் கிண்கிணிக ளோலிடும் பொன்னடியைக்
கண்டுகொள்ள வாசைகொண்டேன் கண்ணே பரஞ்சுடரே. – (154)

செக்கச் சிவந்திலங்கு தீப்போலு மேனியின் மேன்
மிக்கவு மெற்கோர் விருப்பம் பரஞ்சுடரே. – (155)

தேவடியார் மொய்காணிற் சீரியகண் ணாலழைக்கும்
பாவனைக்கு நானாசைப் பட்டேன் பரஞ்சுடரே. – (156)

துன்பத்தை வேண்டாத் தொழும்பரொடு பேசுநின்சொல்
இன்பத்துக் காசைகொண்டே னெண்ணே பரஞ்சுடரே. – (157)

பணத்தைப் பணமென்று பாராம னல்குன்
குணத்துக்கு நானாசை கொண்டேன் பரஞ்சுடரே. – (158)

மையலுற்ற யாவரையு மைதுனஞ்செய் யன்பினுக்கு
மையலுற்று நான்புலம்பு மாறே பரஞ்சுடரே. – (159)

வேல்பிடிக்குங் கண்ணார் விரும்பி நிதம்பிடிக்கும்
கால்பிடிக்க வென்னாசை கண்டாய் பரஞ்சுடரே. – (160)

மால்பிடித்த பூவணைமேன் மைதுனஞ்செய் தேகாமப்
பால்குடிக்க நானாசைப் பட்டேன் பரஞ்சுடரே. – (161)

நடுக்ககன்றுன் னோடே நடுவணையிற் சேர்ந்து
படுத்துறங்க நானாசைப் பட்டேன் பரஞ்சுடரே. – (162)

நாட்டி லெனைச்சேர்ந்த நட்டார்க் கெலா நினையே
கூட்டிக் கொடுக்கவிச்சை கொண்டேன் பரஞ்சுடரே. – (163)

ஆசைக் குரோசமில்லை யன்பருக்குத் துன்பமில்லை
தாசிகட்கு வேலையென்ன சாற்றாய் பரஞ்சுடரே. – (164)

உண்டி யொறுத்தே னுடைநடைக டாஞ்சிறுத்தேன்
மண்டியவுன் மையலெனு மாலாற் பரஞ்சுடரே. – (165)

பஞ்சுப் படுக்கையற்றேன் பச்சைமணம் பூசலற்றேன்
வஞ்சியுப்பு மற்றேனுன் மாலாற் பரஞ்சுடரே. – (166)

மங்கைவா வென்னாமன் மாதேவா வென்றாலும்
அங்குமொரு பேரின்ப மாமே பரஞ்சுடரே. – (167)

அகந்தான் குளிர்ந்தவன்பா லானந்தத் தேனே
சுகந்தாவென் றாலுமின்பந் தோன்றும் பரஞ்சுடரே. – (168)

துக்கமில்லா வுன்னைச் சொகுசாகக் கூடியுய்யப்
பக்குவமீ தன்றோகண் பாராய் பரஞ்சுடரே – (169)

நானுடலாய் நீயுயிராய் நன்றாய்ப் பொருந்துவதற்
கானவொரு பக்குவமீ தன்றோ பரஞ்சுடரே. – (170)

பக்குவத்தி லென்னைநீ பக்குவமாகக் கூடிடற்கு
விக்கினமொன் றுண்டோ விளம்பாய் பரஞ்சுடரே. – (171)

காணுமன்பி னாரெவர்க்குங் காமவிடாய் தீர்த்திதுநாள்
ஆணலமில் லாதயர்வுற் றாயோ பரஞ்சுடரே. – (172)

உள்வீங்கு மின்ப வுறவையளித் தாற்பிடித்துக்
கொள்வேனென் றோவொளித்துக் கொண்டாய் பரஞ்சுடரே. – (173)

தினமு முனைவிரும்புந் தேவடியார் பாலும்
மனம்போனீ சென்றும் வரலாம் பரஞ்சுடரே. – (174)

சின்னஞ் சிறுவயதிற் சீரழிந்து நின்றேனென்
றென்னைக் கழிப்பாயோ வேசில் பரஞ்சுடரே. – (175)

இட்டமய லாள ரெவர்க்குநீ மாப்பிளையென்
றிட்டரறை சொற்கயலோ வேழை பரஞ்சுடரே. – (176)

உன்னை விரும்பியபின் போகையுடன் யாரையுந்தான்
என்னினைவி லெண்ணியிருப் பேனோ பரஞ்சுடரே. – (177)

மெத்தக் கொடுத்தணைய வேண்டுமெனு நோக்கமுற்றோ
இத்துணைநா ணாடா திருத்தல் பரஞ்சுடரே. – (178)

மெத்தக் கொடுக்கவர வேண்டா மிழுக்கி லின்பப்
புத்திரனைத் தந்தருளிற் போதும் பரஞ்சுடரே. – (179)

கூடா திருப்பாயேற் கொண்டகொள்கை யாலெவரும்
தேடார்க ளென்னவினிச் செய்வேன் பரஞ்சுடரே. – (180)

ஏழையா மென்முகத்தை யேறிட்டு நோக்காயேல்
ஏழைகொண்ட காதலெவ்வா றேகும் பரஞ்சுடரே. – (181)

ஏரா ருனைநாடி யேகெட்டே னென்னுமொழி
வாராது கொள்வதற்கு வாராய் பரஞ்சுடரே. – (182)

தீராக் கலக்கமறச் செப்புமனு விற்கிழிவு
வாராது கொள்வதற்கு வாராய் பரஞ்சுடரே. – (183)

தாராள மாகவுன் மேற் சாற்றுங் கவிக்கிழிவு
வாராது கொள்வதற்கு வாராய் பரஞ்சுடரே. – (184)

போராட்டம் பண்ணிப் புலம்பு மெனக்கிழிவு
வாராது கொள்வதற்கு வாராய் பரஞ்சுடரே. – (185)

நாராரு முன்னைமுன்னி நாடியவன் புக்கிழிவு
வாராது கொள்வதற்கு வாராய் பரஞ்சுடரே. – (186)

சீராரு முன்னைமுன்னிச் சிந்தைசெய்த தற்கிழிவு
வாராது கொள்வதற்கு வாராய் பரஞ்சுடரே. – (187)

தேராத சிந்தையினார் சேருங் கதியெனக்கும்
வாராது கொள்வதற்கு வாராய் பரஞ்சுடரே. – (188)

சேராது துண்டுபட்டுச் செல்வார் பலனெனக்கும்
வாராது கொள்வதற்கு வாராய் பரஞ்சுடரே. – (189)

பாம்பன் சுவாமி: முருகனிடம் பக்தி கொண்ட துறவி

தமிழ்நாட்டின் பாம்பனில் 1848 இல் பிறந்த பாம்பன் சுவாமி, முதலில் அப்பாவு என்று பெயரிடப்பட்டவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திறமை பெற்ற சைவக் குழந்தை. 13 வயதில், முருகப்பெருமானின் தரிசனம் அவருக்கு பக்தி கவிதைகள் எழுதத் தூண்டியது. ஆழ்ந்த ஆன்மிகத்திற்கு பெயர் பெற்ற அவர், திருமணத்திற்குப் பிறகும், பிரார்த்தனை மற்றும் பூஜைகளில் தன்னை அர்ப்பணித்து, புனிதமான வாழ்க்கை வாழ்ந்தார்.

சுவாமியின் அசைக்க முடியாத நம்பிக்கை பல அதிசய நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது. அவரது புகழ்பெற்ற பாடல் சண்முக கவசம் பக்தர்களை தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் அவரது பஞ்சாமிர்த வர்ணம் முருகனின் இருப்பை அழைக்கிறது. இரக்கமுள்ள துறவி, அவர் பக்தியைத் தூண்டினார் மற்றும் தன்னலமற்ற செயல்களைச் செய்தார், பெரும்பாலும் தெய்வீக தரிசனங்களால் வழிநடத்தப்பட்டார்.

பாம்பன் சுவாமி சவால்களை எதிர்கொண்டார், ஆனால் எப்போதும் முருகனின் அருளை நம்பியிருந்தார். நோய்வாய்ப்பட்டபோது, ​​அவர் ஜெபத்தின் மூலம் அற்புதமாக குணமடைந்தார். தனிப்பட்ட இழப்புகள் இருந்தபோதிலும், அவர் தனது ஆன்மீக பணியில் கவனம் செலுத்தி, தனிமையில் இருந்தார். ஒரு சிறந்த எழுத்தாளர், சுவாமி தமிழில் 6,666 கவிதைகள் மற்றும் பல படைப்புகளை இயற்றினார், முருகனை 130 க்கும் மேற்பட்ட வடிவங்களில் புகழ்ந்தார்.

அவர் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தினார், அவற்றை புனித மொழிகளாகக் கருதினார். அடக்கத்திற்கு பெயர் பெற்ற அவர் எளிமையாக வாழ்ந்தார், அடிக்கடி மௌன வழிபாடு செய்தார். 1929 இல், சுவாமி சமாதியில் நுழைந்தார், பக்தி மற்றும் ஞானத்தின் பாரம்பரியத்தை விட்டுச் சென்றார்.

பாம்பன் சுவாமியின் வாழ்க்கை முருகன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது, எண்ணற்ற பக்தர்களை ஊக்குவிக்கிறது. அவரது போதனைகள் மற்றும் பாடல்கள் ஆன்மீக வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் தொடர்ந்து வழங்குகின்றன, உண்மையான தேடுபவர்களுக்கு தெய்வீக அருள் எப்போதும் கிடைக்கும் என்பதை நிரூபிக்கிறது.

Pamban Swami: A Saint Devoted to Lord Murugan

Born in 1848 in Pamban, Tamil Nadu, Pamban Swami, originally named Appavu, was a Saivite child gifted in Tamil and English. At 13, he had a vision of Lord Murugan, inspiring him to write devotional poems. Known for his deep spirituality, he lived a saintly life even after marriage, dedicating himself to prayers and pujas.

Swami’s unwavering faith led to many miraculous events. His famous hymn Shanmuga Kavacam is believed to protect devotees from harm, and his Pancamrita Varnam invokes Lord Murugan’s presence. A compassionate saint, he inspired devotion and performed selfless acts, often guided by divine visions.

Pamban Swami faced challenges but always relied on Lord Murugan’s grace. When ill, he was miraculously cured through prayer. Despite personal losses, he remained detached, focusing on his spiritual mission. A prolific writer, Swami composed 6,666 poems and several works in Tamil, praising Murugan in over 130 forms.

He emphasized harmony between Tamil and Sanskrit, considering them sacred languages. Known for his humility, he lived simply, often performing silent worship. In 1929, Swami entered samadhi, leaving behind a legacy of devotion and wisdom.

Pamban Swami’s life exemplifies unwavering faith in Lord Murugan, inspiring countless devotees. His teachings and hymns continue to offer spiritual guidance and protection, proving that divine grace is always available to sincere seekers.