தலம் : அண்ணாமலை
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : நட்டபாடை
நாடு : நடுநாடு
சுவாமி : அருணாசலேஸ்வரர்;
அம்பாள் : அபீதகுஜாம்பாள்
திருச்சிற்றம்பலம்
உண்ணாமுலை உமையாளொடும்
உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை
திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள்
மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை
வழுவாவண்ணம் அறுமே. 1
தேமாங்கனி கடுவன்கொள
விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை
சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில்
அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி
நினைவார்வினை யிலரே. 2
பீலிம்மயில் பெடையோடுறை
பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேல்நிறை
சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில்
அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி
தொழுவாரன புகழே. 3
உதிரும்மயி ரிடுவெண்டலை
கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவும்1
எருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை இளவெண்பிறை
முடிமேல்கொள அடிமேல்
அதிருங்கழல் அடிகட்கிடம்
அண்ணாமலை யதுவே.
பாடம் : 1யுணவாகவும் 4
மரவஞ்சிலை தரளம்மிகு
மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும்
அண்ணாமலை அண்ணல்
உரவஞ்சடை யுலவும்புனல்
உடனாவதும் ஓரார்
குரவங்கமழ் நறுமென்குழல்
உமைபுல்குதல் குணமே. 5
பெருகும்புனல் அண்ணாமலை
பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி
அணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ்
சடையார்கழல் பரவி
உருகும்மனம் உடையார்தமக்
குறுநோயடை யாவே. 6
கரிகாலன குடர்கொள்வன
கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை
யுதையுண்டவை யுருள
எரியாடிய இறைவர்க்கிடம்
இனவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும்
அண்ணாமலை யதுவே. 7
ஒளிறூபுலி யதளாடையன்
உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண
வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய
விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தானிடம்
அண்ணாமலை யதுவே. 8
விளவார்கனி படநூறிய
கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை
கேடில்புக ழோனும்
அளவாவணம் அழலாகிய
அண்ணாமலை அண்ணல்
தளராமுலை முறுவல்லுமை
தலைவன்னடி சரணே. 9
வேர்வந்துற மாசூர்தர
வெயில்நின்றுழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர
மறையாவரு வாரும்
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின்
அண்ணாமலை அண்ணல்
கூர்வெண்மழுப் படையான்நல்ல
கழல்சேர்வது குணமே. 10
வெம்புந்திய கதிரோன்ஒளி
விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன்
அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ
குளிர்காழியுள் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர்
அடிபேணுதல் தவமே. 11
திருச்சிற்றம்பலம்