01.050 ஒல்லையாறி உள்ளம்ஒன்றிக்

நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : வலிவலம்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : பழந்தக்கராகம்


சுவாமி : இருதய கமலநாதேஸ்வரர்;
அம்பாள் : வாளையங்கண்ணி

திருச்சிற்றம்பலம்

ஒல்லையாறி உள்ளம்ஒன்றிக்
கள்ளம்ஒழிந் துவெய்ய
சொல்லையாறித் தூய்மைசெய்து
காமவினை யகற்றி
நல்லவாறே யுன்றன்நாமம்
நாவில்நவின் றேத்த1
வல்லவாறே வந்துநல்காய்
வலிவலமே யவனே.

பாடம் : 1நாவின் நவிற்றுகின்றேன் 2வல்லவாறே நல்குகண்டாய் வலிவலம்மேயானே 1

இயங்குகின்ற இரவிதிங்கள்
மற்றுநல்தே வரெல்லாம்
பயங்களாலே பற்றிநின்பால்
சித்தந்தெளி கின்றிலர்
தயங்குசோதீ சாமவேதா
காமனைக்காய்ந் தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய்
வலிவலமே யவனே. 2

பெண்டிர்மக்கள் சுற்றமென்னும்
பேதைப்பெருங் கடலை
விண்டுபண்டே வாழமாட்டேன்
வேதனைநோய் நலியக்
கண்டுகண்டே யுன்றன்நாமங்
காதலிக்கின் றதுள்ளம்
வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை
வலிவலமே யவனே. 3

மெய்யராகிப் பொய்யைநீக்கி
வேதனையைத் துறந்து
செய்யரானார் சிந்தையானே
தேவர்குலக் கொழுந்தே
நைவன் நாயேன் உன்றன்நாமம்
நாளும்நவிற் றுகின்றேன்
வையம்முன்னே வந்துநல்காய்
வலிவலமே யவனே. 4

துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ்
சொல்லுவனுன் திறமே
தஞ்சமில்லாத் தேவர்வந்துன்
தாளிணைக்கீழ்ப் பணிய
நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ
நாளும்நினைந் தடியேன்
வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன்
வலிவலமே யவனே. 5

புரிசடையாய் புண்ணியனே
நண்ணலார்மூ வெயிலும்
எரியஎய்தாய் எம்பெருமான்
என்றிமையோர் பரவும்
கரியுரியாய் காலகாலா
நீலமணி மிடற்று
வரியரவா வந்துநல்காய்
வலிவலமே யவனே. 6

தாயுநீயே தந்தைநீயே
சங்கரனே யடியேன்
ஆயுநின்பால் அன்புசெய்வான்
ஆதரிக்கின் றதுள்ளம்
ஆயமாய காயந்தன்னுள்
ஐவர்நின்றொன் றலொட்டார்
மாயமேயென் றஞ்சுகின்றேன்
வலிவலமே யவனே. 7

நீரொடுங்குஞ் செஞ்சடை யாய்நின்
னுடையபொன் மலையை
வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற
வேந்தன்இரா வணனைத்
தேரொடும்போய் வீழ்ந்தலறத்
திருவிரலால் அடர்த்த
வாரொடுங்கும் கொங்கைபங்கா
வலிவல மேயவனே. 8

ஆதியாய நான்முகனும்
மாலுமறி வரிய
சோதியானே நீதியில்லேன்
சொல்லுவன்நின் திறமே
ஓதிநாளும் உன்னையேத்தும்
என்னைவினை அவலம்
வாதியாமே வந்துநல்காய்
வலிவலமே யவனே. 9

பொதியிலானே பூவணத்தாய்
பொன்திகழுங் கயிலைப்
பதியிலானே பத்தர்சித்தம்
பற்றுவிடா தவனே
விதியிலாதார் வெஞ்சமணர்
சாக்கியரென் றிவர்கள்
மதியிலாதா ரென்செய்வாரோ
வலிவல மேயவனே. 10

வன்னிகொன்றை மத்தஞ்சூடும்
வலிவலமே யவனைப்
பொன்னிநாடன் புகலிவேந்தன்
ஞானசம் பந்தன்சொன்ன
பன்னுபாடல் பத்தும்வல்லார்
மெய்த்தவத்தோர் விரும்பும்
மன்னுசோதி யீசனோடே
மன்னியிருப் பாரே.. 11

திருச்சிற்றம்பலம்

Leave a Reply