சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்
54) தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய்
பொன்முகக்கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான்
என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ!
நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ. (2)
55) என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான்
தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல்
மஞ்சில்மறையாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா.
56) சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும்
எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய்
வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற
கைத்தலம்நோவாமே அம்புலீ! கடிதோடிவா.
57) சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து
ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண்
தக்கதறிதியேல் சந்திரா! சலம்செய்யாதே
மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய்.
58) அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா
மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான்
குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல்
புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ!
59) தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன்
கண்துயில்கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான்
உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில்
விண்தனில்மன்னிய மாமதீ! விரைந்தோடிவா.
60) பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள்
ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்
மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல்
மாலைமதியாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா.
61) சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய்
சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள்
சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண்
நிறைமதீ! நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான்.
62) தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்
ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண்
வாழவுறுதியேல் மாமதீ! மகிழ்ந்தோடிவா.
63) மைத்தடங்கண்ணி யசோதைதன்மகனுக்கு இவை
ஒத்தனசொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர்
வித்தகன்விட்டுசித்தன் விரித்ததமிழிவை
எத்தனையும்சொல்லவல்லவர்க்கு இடரில்லையே. (2)
[…] நான்காம் திருமொழி – தன் முகத்து […]