பத்தாம் திருமொழி – ஆற்றிலிருந்து

ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்

213) ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு
காற்றின்கடியனாய் ஓடிஅகம்புக்கு
மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும்
வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும். (2)

214) குண்டலம்தாழக் குழல்தாழநாண்தாழ
எண்திசையோரும் இறைஞ்சித்தொழுதேத்த
வண்டமர்பூங்குழலார் துகில்கைக்கொண்டு
விண்தோய்மரத்தானால்இன்றுமுற்றும்
வேண்டவும்தாரானால்இன்றுமுற்றும்.

215) தடம்படுதாமரைப் பொய்கைகலக்கி
விடம்படுநாகத்தை வால்பற்றிஈர்த்து
படம்படுபைந்தலை மேலெழப்பாய்ந்திட்டு
உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும்
உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும்.

216) தேனுகனாவி செகுத்து பனங்கனி
தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால்
வானவர்கோன்விட வந்தமழைதடுத்து
ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும்
அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும்.

217) ஆய்ச்சியர்சேரி அளைதயிர்பாலுண்டு
பேர்த்தவர்கண்டுபிடிக்கப் பிடியுண்டு
வேய்த்தடந்தோளினார் வெண்ணெய்கொள்மாட்டாது அங்
காப்புண்டிருந்தானால்இன்றுமுற்றும்
அடியுண்டழுதானால்இன்றுமுற்றும்.

218) தள்ளித்தளிர்நடையிட்டு இளம்பிள்ளையாய்
உள்ளத்தினுள்ளே அவளையுறநோக்கி
கள்ளத்தினால்வந்த பேய்ச்சிமுலையுயிர்
துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும்
துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும்.

219) மாவலிவேள்வியில் மாணுருவாய்ச்சென்று
மூவடிதாவென்று இரந்தஇம்மண்ணினை
ஓரடியிட்டு இரண்டாமடிதன்னிலே
தாவடியிட்டானால்இன்றுமுற்றும்
தரணியளந்தானால்இன்றுமுற்றும்.

220) தாழைதண்ணாம்பல் தடம்பெரும்பொய்கைவாய்
வாழுமுதலை வலைப்பட்டுவாதிப்புண்
வேழம்துயர்கெட விண்ணோர்பெருமானாய்
ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும்
அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும்.

221) வானத்தெழுந்த மழைமுகில்போல் எங்கும்
கானத்துமேய்ந்து களித்துவிளையாடி
ஏனத்துருவாய் இடந்தஇம்மண்ணினை
தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும்
தரணியிடந்தானால்இன்றுமுற்றும்.

222) அங்கமலக்கண்ணன்தன்னை யசோதைக்கு
மங்கைநல்லார்கள்தாம் வந்துமுறைப்பட்ட
அங்கவர்சொல்லைப் புதுவைப்கோன்பட்டன்சொல்
இங்கிவைவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே. (2)

1 thought on “பத்தாம் திருமொழி – ஆற்றிலிருந்து”

Leave a Reply