திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்
286) ஐயபுழுதிஉடம்பளைந்து இவள்பேச்சுமலந்தலையாய்
செய்யநூலின்சிற்றாடை செப்பனுடுக்கவும்வல்லளல்லள்
கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள்
பையரவணைப்பள்ளியானோடு கைவைத்துஇவள்வருமே. (2)
287) வாயில்பல்லும்எழுந்தில மயிரும்முடிகூடிற்றில
சாய்விலாதகுறுந்தலைச் சிலபிள்ளைகளோடிணங்கி
தீயிணக்கிணங்காடிவந்து இவள்தன்னன்னசெம்மைசொல்லி
மாயன்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே.
288) பொங்குவெண்மணல்கொண்டு சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில்
சங்குசக்கரம்தண்டுவாள் வில்லுமல்லதுஇழைக்கலுறாள்
கொங்கைஇன்னம்குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை
சங்கையாகிஎன்னுள்ளம் நாள்தொறும்தட்டுளுப்பாகின்றதே.
289) ஏழைபேதைஓர்பாலகன்வந்து என்பெண்மகளையெள்கி
தோழிமார்பலர்கொண்டுபோய்ச்செய்த சூழ்ச்சியையார்க்குரைக்கேன்?
ஆழியானென்னுமாழமோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி
மூழையுப்பறியாததென்னும் மூதுரையுமிலளே.
290) நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கள்
சூடி நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள்
கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடிவளை
பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே.
291) பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும்
இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள்
பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும்
வட்டவார்குழல்மங்கைமீர்! இவள்மாலுறுகின்றாளே.
292) பேசவும் தரியாதபெண்மையின் பேதையேன்பேதைஇவள்
கூசமின்றிநின்றார்கள்தம்மெதிர் கோல்கழிந்தான்மூழையாய்
கேசவாவென்றும்கேடிலீயென்றும் கிஞ்சுகவாய்மொழியாள்
வாசவார்குழல்மங்கைமீர்! இவள்மாலுறுகின்றாளே.
293) காறைபூணும்கண்ணாடிகாணும் தன்கையில்வளைகுலுக்கும்
கூறையுடுக்கும்அயர்க்கும் தங்கொவ்வைச்செவ்வாய்திருத்தும்
தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும்
மாறில்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே.
294) கைத்தலத்துள்ளமாடழியக் கண்ணாலங்கள்செய்து இவளை
வைத்துவைத்துக்கொண்டு என்னவாணியம்? நம்மை வடுப்படுத்தும்
செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள
மைத்தடமுகில்வண்ணன்பக்கல் வளரவிடுமின்களே.
295) பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து பேணிநம்மில்லத்துள்ளே
இருத்துவானெண்ணிநாமிருக்க இவளும்ஒன்றெண்ணுகின்றாள்
மருத்துவப்பதம்நீங்கினாளென்னும்வார்த்தை படுவதன்முன்
ஒருப்படுத்திடுமின்இவளை உலகளந்தானிடைக்கே.
296) ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில் நாராயணனுக்கு இவள்
மாலதாகிமகிழ்ந்தனளென்று தாயுரைசெய்ததனை
கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன
மாலைபத்தும்வல்லவர்கட்கு இல்லைவருதுயரே. (2)
[…] ஏழாம் திருமொழி – ஐயபுழுதி […]