ஒன்பதாம் திருமொழி – என்னாதன்

க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் உந்திபறித்தல்

307) என்னாதன்தேவிக்கு அன்றுஇன்பப்பூஈயாதாள்
தன் நாதன்காணவே தண்பூமரத்தினை
வன்னாதப்புள்ளால் வலியப்பறித்திட்ட
என்னாதன்வன்மையைப்பாடிப்பற எம்பிரான்வன்மையைப்பாடிப்பற. (2)

308) என்வில்வலிகண்டு போவென்றுஎதிர்வந்தான்
தன் வில்லினோடும் தவத்தைஎதிர்வாங்கி
முன்வில்வலித்து முதுபெண்ணுயிருண்டான்
தன் வில்லின்வன்மையைப்பாடிப்பற தாசரதிதன்மையைப்படிப்பற.

309) உருப்பிணிநங்கையைத் தேரேற்றிக்கொண்டு
விருப்புற்றங்கேக விரைந்துஎதிர்வந்து
செருக்குற்றான் வீரம்சிதைய தலையைச்
சிரைத்திட்டான்வன்மையைப்பாடிப்பற தேவகிசிங்கத்தைப்பாடிப்பற.

310) மாற்றுத்தாய்சென்று வனம்போகேஎன்றிட
ஈற்றுத்தாய்பின்தொடர்ந்து எம்பிரான்! என்றுஅழ
கூற்றுத்தாய்சொல்லக் கொடியவனம்போன
சீற்றமிலாதானைப்பாடிப்பற சீதைமணாளனைப்பாடிப்பற

311) பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட் டருள்செய்த
அஞ்சனவண்ணனைப்பாடிப்பற அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற.

312) முடியொன்றிமூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த
படியில்குணத்துப் பரதநம்பிக்கு அன்று
அடிநிலையீந்தானைப்பாடிப்பற அயோத்தியர்கோமானைப்பாடிப்பற.

313) காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு அவன்
நீள்முடியைந்திலும்நின்று நடம்செய்து
மீளஅவனுக்கு அருள்செய்தவித்தகன்
தோள்வலிவீரமேபாடிப்பற தூமணிவண்ணனைப்பாடிப்பற.

314) தார்க்குஇளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம்
நூற்றவள் சொல்கொண்டுபோகி நுடங்கிடைச்
சூர்ப்பணகாவைச்செவியொடுமூக்கு அவள்
ஆர்க்கஅரிந்தானைப்பாடிப்பற அயோத்திக்கரசனைப்பாடிப்பற.

315) மாயச்சகடமுதைத்து மருதிறுத்து
ஆயர்களோடுபோய் ஆநிரைகாத்து அணி
வேயின்குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயர்களேற்றினைப்பாடிப்பற ஆநிரைமேய்த்தானைப்பாடிப்பற.

316) காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு
ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும்
நேராஅவன்தம்பிக்கே நீளரசீந்த
ஆராவமுதனைப்பாடிப்பற அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற.

317) நந்தன்மதலையைக் காகுத்தனைநவின்று
உந்திபறந்த ஒளியிழையார்கள்சொல்
செந்தமிழ்த்தென்புதுவை விட்டுசித்தன்சொல்
ஐந்தினோடைந்தும்வல்லார்க்கு அல்லலில்லையே. (2)

1 thought on “ஒன்பதாம் திருமொழி – என்னாதன்”

Leave a Reply