பத்தாம் திருமொழி – நெறிந்தகருங்குழல்

இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்

318) நெறிந்தகருங்குழல்மடவாய். நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்தமணிமுடிச்சனகன் சிலையிறுத்துநினைக்கொணர்ந்த
தறிந்து அரசுகளைகட்ட அருந்தவத்தோன்இடைவிலங்க
செறிந்தசிலைகொடுதவத்தைச் சிதைத்ததும்ஓரடையாளம். (2)

319) அல்லியம்பூமலர்க்கோதாய். அடிபணிந்தேன்விண்ணப்பம்
சொல்லுகேன்கேட்டருளாய் துணைமலர்க்கண்மடமானே!
எல்லியம்போதினிதிருத்தல் இருந்ததோரிடவகையில்
மல்லிகைமாமாலைகொண்டு அங்குஆர்த்ததும்ஓரடையாளம்.

320) கலக்கியமாமனத்தனளாய்க் கைகேசிவரம்வேண்ட
மலக்கியமாமனத்தனனாய் மன்னவனுமறாதொழிய
குலக்குமரா! காடுறையப்போ என்றுவிடைகொடுப்ப
இலக்குமணன்தன்னொடும் அங்குஏகியதுஓரடையாளம்.

321) வாரணிந்தமுலைமடவாய்! வைதேவீ! விண்ணப்பம்
தேரணிந்தஅயோத்தியர்கோன் பெருந்தேவீ! கேட்டருளாய்
கூரணிந்தவேல்வலவன் குகனோடும்கங்கைதன்னில்
சீரணிந்ததோழமை கொண்டதும்ஓரடையாளம்.

322) மானமருமெல்நோக்கி! வைதேவீ! விண்ணப்பம்
கானமரும்கல்லதர்போய்க் காடுறைந்தகாலத்து
தேனமரும்பொழிற்சாரல் சித்திரகூடத்துஇருப்ப
பால்மொழியாய்! பரதநம்பி பணிந்ததும்ஓரடையாளம்.

323) சித்திரகூடத்துஇருப்பச் சிறுகாக்கைமுலைதீண்ட
அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும்திரிந்தோடி
வித்தகனே. இராமாவோ. நின்னபயம்என்றுஅழைப்ப
அத்திரமேயதன்கண்ணை அறுத்ததும்ஓரடையாளம்.

324) மின்னொத்த_ண்ணிடையாய்! மெய்யடியேன்விண்ணப்பம்
பொன்னொத்தமானொன்று புகுந்துஇனிதுவிளையாட
நின்னன்பின்வழிநின்று சிலைபிடித்துஎம்பிரான்ஏக
பின்னேஅங்குஇலக்குமணன் பிரிந்ததும்ஓரடையாளம்.

325) மைத்தகுமாமலர்க்குழலாய்! வைதேவீ! விண்ணப்பம்
ஒத்தபுகழ்வானரக்கோன் உடனிருந்துநினைத்தேட
அத்தகுசீரயோத்தியர்கோன் அடையாளமிவைமொழிந்தான்
இத்தகையால்அடையாளம் ஈதுஅவன்கைம்மோதிரமே.

326) திக்குநிறைபுகழாளன் தீவேள்விச்சென்றநாள்
மிக்கபெருஞ்சபைநடுவே வில்லிறுத்தான்மோதிரம்கண்டு
ஒக்குமால்அடையாளம் அனுமான்! என்றுஉச்சிமேல்
வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே. (2)

327) வாராரும்முலைமடவாள் வைதேவிதனைக்கண்டு
சீராரும்திறலனுமன் தெரிந்துரைத்தஅடையாளம்
பாராரும்புகழ்ப்புதுவைப் பட்டர்பிரான்பாடல்வல்லார்
ஏராரும்வைகுந்தத்து இமையவரோடுஇருப்பாரே. (2)

1 thought on “பத்தாம் திருமொழி – நெறிந்தகருங்குழல்”

Leave a Reply