ஆறாம் திருமொழி – காசுங்கறையுட

பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்

381) காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும்
ஆசையினால் அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள்
கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ
நாயகன் நாரணன் தம்அன்னைநரகம்புகாள். (2)

382) அங்கொருகூறை அரைக்குடுப்பதனாசையால்
மங்கியமானிடசாதியின் பேரிடும்ஆதர்காள்!
செங்கணெடுமால் சிரீதரா! என்றுஅழைத்தக்கால்
நங்கைகாள்! நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.

383) உச்சியில்எண்ணெயும் சுட்டியும்வளையுமுகந்து
எச்சம்பொலிந்தீர்காள்! எஞ்செய்வான்பிறர்பேரிட்டீர்?
பிச்சைபுக்காகிலும் எம்பிரான்திருநாமமே
நச்சுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.

384) மானிடசாதியில்தோன்றிற்று ஓர்மானிடசாதியை
மானிடசாதியின்பேரிட்டால் மறுமைக்கில்லை
வானுடைமாதவா. கோவிந்தா. என்றுஅழைத்தக்கால்
நானுடை நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.

385) மலமுடையூத்தையில்தோன்றிற்று ஓர்மலவூத்தையை
மலமுடையூத்தையின்பேரிட்டால் மறுமைக்கில்லை
குலமுடைக்கோவிந்தா! கோவிந்தா! என்றுஅழைத்தக்கால்
நலமுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள்.

386) நாடும்நகரும்அறிய மானிடப்பேரிட்டு
கூடியழுங்கிக் குழியில்வீழ்ந்துவழுக்கதே
சாடிறப்பாய்ந்ததலைவா! தாமோதரா! என்று
நாடுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.

387) மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்கு
எண்ணமொன்றின்றியிருக்கும் ஏழைமனிசர்காள்!
கண்ணுக்கினிய கருமுகில்வண்ணன்நாமமே
நண்ணுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.

388) நம்பிபிம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால்
நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம்
செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால்
நம்பிகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.

389) ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் உங்கள்
மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு
கோத்துக்குழைத்துக் குணாலமாடித்திரிமினோ
நாத்தகு நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.

390) சீரணிமால் திருநாமமேயிடத்தேற்றிய
வீரணிதொல்புகழ் விட்டுசித்தன்விரித்த
ஓரணியொண்தமிழ் ஒன்பதோடொன்றும்வல்லவர்
பேரணிவைகுந்தத்து என்றும்பேணியிருப்பரே. (2)

1 thought on “ஆறாம் திருமொழி – காசுங்கறையுட”

Leave a Reply