ஆறாம் திருமொழி – வாரணமாயிரம்

மாயவனை மணஞ்செது கொள்வதாகத் தான்கண்ட களவைத் தலைவி தோழிக்குக் கூறுதல்

556 வாரணமாயிரம் சூழவலம்செய்து
நாரணநம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரணபொற்குடம் வைத்துப்புறமெங்கும்
தோரணம்நாட்டக் கனாக்கண்டேன்தோழீ! நான். (2) 1

557 நாளைவதுவை மணமென்றுநாளிட்டு
பாளைகமுகு பரிசுடைப்பந்தற்கீழ்
கோளரிமாதவன் கோவிந்தனென்பான் ஓர்
காளைபுகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான். 2

558 இந்திரனுள்ளிட்ட தேவர்குழாமெல்லாம்
வந்திருந்தென்னைம கட்பேசிமந்திரித்து
மந்திரக்கோடியுடுத்தி மணமாலை
அந்தரிசூட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான். 3

559 நால்திசைத்தீர்த்தங்கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனச்சிட்டர்கள் பல்லாரெடுத்தேத்தி
பூப்புனைகண்ணிப் புனிதனோடென்றன்னை
காப்புநாண்கட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான். 4

560 கதிரொளிதீபம் கலசமுடனேந்தி
சதிரிளமங்கையர்தாம் வந்தெதிர்கொள்ள
மதுரையார்மன்ன னடிநிலைதொட்டு எங்கும்
அதிரப்புகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான். 5

561 மத்தளங்கொட்ட வரிசங்கம்நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்தபந்தற்கீழ்
மைத்துனன்நம்பி மதுசூதன்வந்து என்னைக்
கைத்தலம்பற்றக் கனாக்கண்டேன் தோழீ! நான். 6

562 வாய்நல்லார் நல்லமறையோதி மந்திரத்தால்
பாசிலைநாணல்படுத்துப் பரிதிவைத்து
காய்சினமாகளிறன்னான் என்கைப்பற்றி
தீவலஞ்செய்யக் கனாக்கண்டேன் தோழீ! நான். 7

563 இம்மைக்குமேழேழ்பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன்நம்பி
செம்மையுடையதிருக்கையால் தாள்பற்றி
அம்மிமிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ! நான். 8

564 வரிசிலைவாள்முகத்து என்னைமார்தாம்வந்திட்டு
எரிமுகம்பாரித்து என்னைமுன்னேநிறுத்தி
அரிமுகனச்சுதன் கைம்மேலென்கைவைத்து
பொரிமுகந்தட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான். 9

565 குங்குமமப்பிக் குளிர்சாந்தம்மட்டித்து
மங்கலவீதி வலம்செய்துமணநீர்
அங்கவனோடும் உடன்சென்றங்கானைமேல்
மஞ்சனமாட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான். 10

566 ஆயனுக்காகத் தான்கண்டகனாவினை
வேயர்புகழ் வில்லிபுத்தூர்க்கோன்கோதைசொல்
தூயதமிழ்மாலை ஈரைந்தும்வல்லவர்
வாயுநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. (2) 11

1 thought on “ஆறாம் திருமொழி – வாரணமாயிரம்”

Leave a Reply