திருப்பாவை

474 மார்கழித்திங்கள் மதிநிறைந்தநன்னாளால்
நீராடப்போதுவீர் போதுமினோநேரிழையீர்!
சீர்மல்குமாய்ப்பாடிச் செல்வச்சிறுமீர்காள்!
கூர்வேல்கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன்
ஏரார்ந்தகண்ணி யசோதையிளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண் கதிர்மதியம்போல்முகத்தான்
நாராயணனே நமக்கேபறைதருவான்
பாரோர்புகழப் படிந்தேலோரெம்பாவாய். (2) 1

475 வையத்துவாழ்வீர்காள்! நாமும்நம்பாவைக்கு
செய்யும்கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடிபாடி
நெய்யுண்ணோம்பாலுண்ணோம் நாட்காலேநீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டுநாம்முடியோம்
செய்யாதனசெய்யோம் தீக்குறளைசென்றோதோம்
ஐயமும்பிச்சையும் ஆந்தனையும்கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய். 2

476 ஓங்கியுலகளந்த உத்தமன்பேர்பாடி
நாங்கள்நம்பாவைக்குச் சாற்றிநீராடினால்
தீங்கின்றிநாடெல்லாம் திங்கள்மும்மாரிபெய்து
ஓங்குபெருஞ்செந்நெலூடு கயலுகள
பூங்குவளைப்போதில் பொறிவண்டுகண்படுப்ப
தேங்காதேபுக்கிருந்து சீர்த்தமுலைபற்றி
வாங்க குடம்நிறைக்கும் வள்ளல்பெரும்பசுக்கள்
நீங்காதசெல்வம் நிறைந்தேலோரெம்பாவாய். (2) 3

477 ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீகைகரவேல்
ஆழியுள்புக்கு முகந்துகொடார்த்தேறி
ஊழிமுதல்வனுருவம்போல்மெய்கறுத்து
பாழியந்தோளுடைப் பற்பநாபன்கையில்
ஆழிபோல்மின்னி வலம்புரிபோல்நின்றதிர்ந்து
தாழாதேசார்ங்கமுதைத்த சரமழைபோல்
வாழவுலகினில்பெய்திடாய் நாங்களும்
மார்கழிநீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய். 4

478 மாயனை மன்னுவடமதுரைமைந்தனை
தூயபெருநீர் யமுனைத்துறைவனை
ஆயர்குலத்தினில்தோன்றும் அணிவிளக்கை
தாயைக்குடல்விளக்கம்செய்த தாமோதரனை
தூயோமாய்வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால்பாடி மனத்தினால்சிந்திக்க
போயபிழையும் புகுதருவான்நின்றனவும்
தீயினில்தூசாகும் செப்பேலோரெம்பாவாய். 5

479 புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில்
வெள்ளைவிளிசங்கின் பேரரவம்கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலைநஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக்காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்தவித்தினை
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும்யோகிகளும்
மெள்ளவெழுந்து அரியென்றபேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய். 6

480 கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசினபேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும்பிறப்பும் கலகலப்பக்கைபேர்த்து
வாசநறுங்குழலாய்ச்சியர் மத்தினால்
ஓசைபடுத்த தயிரரவம்கேட்டிலையோ?
நாயகப்பெண்பிள்ளாய்! நாராயணன்மூர்த்தி
கேசவனைப்பாடவும் நீகேட்டேகிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோரெம்பாவாய். 7

481 கீழ்வானம்வெள்ளென்று எருமைசிறுவீடு
மேய்வான்பரந்தனகாண் மிக்குள்ளபிள்ளைகளும்
போவான்போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்
கூவுவான்வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
மாவாய்பிளந்தானை மல்லரைமாட்டிய
தேவாதிதேவனைச் சென்றுநாம்சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய். 8

482 தூமணிமாடத்துச் சுற்றும்விளக்கெரிய
தூபம்கமழத் துயிலணைமேல்கண்வளரும்
மாமான்மகளே! மணிக்கதவம்தாள்திறவாய்
மாமீர்! அவளையெழுப்பீரோ? உன்மகள்தான்
ஊமையோ? அன்றிச்செவிடோ? அனந்தலோ?
ஏமப்பெருந் துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன்மாதவன் வைகுந்தனென்றென்று
நாமம்பலவும் நவின்றேலோரெம்பாவாய். 9

483 நோற்றுச்சுவர்க்கம் புகுகின்றவம்மனாய்!
மாற்றமும்தாராரோ? வாசல்திறவாதார்
நாற்றத்துழாய்முடி நாராயணன்நம்மால்
போற்றப்பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின்வாய்வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றுமுனக்கே பெருந்துயில்தான்தந்தானோ?
ஆற்றஅனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய்வந்து திறவேலோரெம்பாவாய். 10

484 கற்றுக்கறவைக் கணங்கள்பலகறந்து
செற்றார்திறலழியச் சென்றுசெருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம்பொற்கொடியே!
புற்றரவல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத்தோழிமாரெல்லாரும்வந்து நின்
முற்றம்புகுந்து முகில்வண்ணன்பேர்பாட
சிற்றாதேபேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோரெம்பாவாய். 11

485 கனைத்திளங்கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்துமுலைவழியே நின்றுபால்சோர
நனைத்தில்லம்சேறாக்கும் நற்செல்வன்தங்காய்!
பனித்தலைவீழ நின்வாசற்கடைபற்றி
சினத்தினால்தென்னிலங்கைக் கோமானைச்செற்ற
மனத்துக்கினியானைப் பாடவும்நீவாய்திறவாய்
இனித்தானெழுந்திராய் ஈதென்னபேருறக்கம்?
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய். 12

486 புள்ளின்வாய்கீண்டானைப் பொல்லாவரக்கனை
கிள்ளிக்களைந்தானைக் கீர்த்திமைபாடிப்போய்ப்
பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம்புக்கார்
வெள்ளியெழுந்து வியாழ முறங்கிற்று
புள்ளும்சிலம்பினகாண் போதரிக்கண்ணினாய்!
குள்ளக்குளிரக் குடைந்துநீராடாதே
பள்ளிக்கிடத்தியோ? பாவாய்! நீநன்நாளால்
கள்ளம்தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய். 13

487 உங்கள்புழக்கடைத் தோட்டத்துவாவியுள்
செங்கழுனீர்வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய்கூம்பின காண்
செங்கற்பொடிக்கூரை வெண்பல்தவத்தவர்
தங்கள்திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களைமுன்ன மெழுப்புவான்வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடுசக்கரம் ஏந்தும்தடக்கையன்
பங்கயக்கண்ணானைப் பாடேலோரெம்பாவாய். 14

488 எல்லே! இளங்கிளியே! இன்னமுறங்குதியோ?
சில்லென்றழையேன்மின்! நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லையுன்கட்டுரைகள் பண்டேயுன்வாயறிதும்
வல்லீர்கள்நீங்களே நானேதானாயிடுக
ஒல்லைநீபோதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும்போந்தாரோ? போந்தார்போந்தெண்ணிக்கொள்
வல்லானைகொன்றானை மாற்றாரைமாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோரெம்பாவாய். 15

489 நாயகனாய்நின்ற நந்தகோபனுடைய
கோயில்காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில்காப்பானே! மணிக்கதவம்தாள்திறவாய்
ஆயர்சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன்மணிவண்ணன் நென்னலேவாய்நேர்ந்தான்
தூயோமாய்வந்தோம் துயிலெழப்பாடுவான்
வாயால்முன்னம்முன்னம் மாற்றாதேயம்மா! நீ
நேயநிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய். (2) 16

490 அம்பரமேதண்ணீரே சோறேயறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பரமூடறுத்தோங்கி உளகளந்த
உம்பர்கோமானே! உறங்காதெழுந்திராய்
செம்பொற்கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும்நீயும் உறங்கேலோரெம்பாவாய். 17

491 உந்துமதகளிற்றன் ஓடாததோள்வலியன்
நந்தகோபாலன்மருமகளே! நப்பின்னாய்!
கந்தம்கமழுங்குழலி! கடைதிறவாய்
வந்தெங்குங் கோழியழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால்குயிலினங்கள்கூவினகாண்
பந்தார்விரலி! உன்மைத்துனன்பேர்பாட
செந்தாமரைக்கையால் சீரார்வளையொலிப்ப
வந்துதிறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய். (2) 18

492 குத்துவிளக்கெரிய கோட்டுக்கால்கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின்மேலேறி
கொத்தலர்பூங்குழல் நப்பின்னைகொங்கைமேல்
வைத்துக்கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்
மைத்தடங்கண்ணினாய்! நீஉன்மணாளனை
எத்தனைபோதும் துயிலெழவொட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவமன்று தகவேலோரெம்பாவாய். 19

493 முப்பத்துமூவ ரமரர்க்குமுன்சென்று
கப்பம்தவிர்க்கும்கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம்கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பென்னமென்முலைச் செவ்வாய்ச்சிறுமருங்குல்
நப்பின்னைநங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும்தட்டொளியும் தந்துஉன்மணாளனை
இப்போதே எம்மைநீராட்டேலோரெம்பாவாய். 20

494 ஏற்றகலங்கள் எதிர்பொங்கிமீதளிப்ப
மாற்றாதேபால்சொரியும் வள்ளல்பெரும்பசுக்கள்
ஆற்றப்படைத்தான்மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய்நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார்உனக்கு வலிதொலைந்துஉன்வாசற்கண்
ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே
போற்றியாம்வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய். 21

495 அங்கண்மாஞாலத்தரசர் அபிமான
பங்கமாய்வந்து நின்பள்ளிக்கட்டிற்கீழே
சங்கமிருப்பார்போல் வந்துதலைப்பெய்தோம்
கிங்கிணிவாய்ச்செய்த தாமரைப்பூப்போலே
செங்கண்சிறுச்சிறிதே எம்மேல்விழியாவோ?
திங்களும்ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கணிரண்டும்கொண்டு எங்கள்மேல்நோக்குதியேல்
எங்கள்மேல்சாபம் இழிந்தேலோரெம்பாவாய். 22

496 மாரிமலைமுழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்
சீரியசிங்கம் அறிவுற்றுத்தீவிழித்து
வேரிமயிர்பொங்க எப்பாடும்பேர்ந்துதறி
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமாபோலே நீபூவைப்பூவண்ணா! உன்
கோயில்நின்று இங்ஙனேபோந்தருளிக்! கோப்புடைய
சீரியசிங்காசனத்திருந்து யாம்வந்த
காரியமாராய்ந்தரு ளேலோரெம்பாவாய். (2) 23

497 அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி
சென்றங்குத்தென்லிங்கைசெற்றாய்! திறல்போற்றி
பொன்றச்சகடமுதைத்தாய்! புகழ்போற்றி
கன்றுகுணிலாஎறிந்தாய்! கழல்போற்றி
குன்றுகுடையாவெடுத்தாய்! குணம்போற்றி
வென்றுபகைகெடுக்கும் நின்கையில்வேல்போற்றி
என்றென்றுன்சேவகமே ஏத்திப்பறைகொள்வான்
இன்றுயாம்வந்தோம் இரங்கேலோரெம்பாவாய். (2) 24

498 ஒருத்திமகனாய்ப்பிறந்து ஓரிரவில்
ஒருத்திமகனாய் ஒளித்துவளரத்
தரிக்கிலானாகித் தான்தீங்குநினைந்த
கருத்தைப்பிழைப்பித்துக் கஞ்சன்வயிற்றில்
நெருப்பென்னநின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்துவந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்கசெல்வமும் சேவகமும்யாம்பாடி
வருத்தமும்தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய். 25

499 மாலே! மணிவண்ணா! மார்கழிநீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவனகேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்கமுரல்வன
பாலன்னவண்ணத்து உன்பாஞ்சசன்னியமே
போல்வனசங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோலவிளக்கே கொடியேவிதானமே
ஆலினிலையாய்! அருளேலோரெம்பாவாய். 26

500 கூடாரைவெல்லும்சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறைகொண்டு யாம்பெறும்சம்மானம்
நாடுபுகழும் பரிசினால்நன்றாகச்
சூடகமேதோள்வளையே தோடேசெவிப்பூவே
பாடகமேயென்றனைய பல்கலனும்யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன்பின்னேபாற்சோறு
மூடநெய்பெய்து முழங்கைவழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய். (2) 27

501 கறவைகள்பின்சென்று கானம்சேர்ந்துண்போம்
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவிபெறுந்தனை புண்ணியம்யாமுடையோம்
குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல்நமக்கு இங்கொழிக்கவொழியாது
அறியாதபிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே
இறைவா! நீதாராய் பறையேலோரெம்பாவாய். (2) 28

502 சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச்சேவித்து உன்
பொற்றாமரையடியே போற்றும்பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்துண்ணுங் குலத்தில் பிறந்து நீ
குற்றேவலெங்களைக் கொள்ளாமற்போகாது
இற்றைப்பறைகொள்வா னன்றுகாண்கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமேயாவோம் உனக்கேநாமாட்செய்வோம்
மற்றைநம்காமங்கள் மாற்றேலோரெம்பாவாய். (2) 29

503 வங்கக்கடல்கடைந்த மாதவனைக்கேசவனை
திங்கள்திருமுகத்துச் சேயிழையார்சென்றிறைஞ்சி
அங்கப்பறைகொண்டவாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான்கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும்தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால்வரைத்தோள்
செங்கண்திருமுகத்துச் செல்வத்திருமாலால்
எங்கும்திருவருள்பெற்று இன்புறுவரெம்பாவாய். (2) 30

1 thought on “திருப்பாவை”

Leave a Reply