தலைவிபிரிளந்தநிலையில்மனம்பொறாது வருந்திக் கூறுதல்
597 கார்க்கோடல் பூக்காள்! கார்க்கடல்வண்ணனென்மேல் உம்மைப்
போர்க்கோலம்செய்து போரவிடுத்தவனெங்குற்றான்
ஆர்க்கோஇனிநாம் பூசலிடுவது? அணிதுழாய்த்
தார்க்கோடும்நெஞ்சந்தன்னைப் படைக்கவல்லேனந்தோ. (2) 1
598 மேற்றோன்றிப்பூக்காள் மேலுலகங்களின்மீதுபோய்
மேற்றோன்றும்சோதி வேதமுதல்வர்வலங்கையில்
மேற்றோன்றுமாழியின் வெஞ்சுடர்போலச் சுடாது எம்மை
மாற்றோலைப்பட்டவர்கூட்டத்து வைத்துகொள்கிற்றிரே. 2
599 கோவைமணாட்டி! நீயுன்கொழுங்கனிகொண்டு எம்மை
ஆவிதொலைவியேல் வாயழகர்தம்மையஞ்சுதும்
பாவியேன்தோன்றிப் பாம்பணையார்க்கும்தம்பாம்புபோல்
நாவுமிரண்டுள வாய்த்து நாணிலியேனுக்கே. 3
600 முல்லைப்பிராட்டி! நீயுன்முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல்விளைவியேல் ஆழிநங்காய்! உன்னடைக்கலம்
கொல்லையரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
சொல்லும்பொய்யானால் நானும்பிறந்தமைபொய்யன்றே. 4
601 பாடும்குயில்காள்! ஈதென்னபாடல்? நல்வேங்கட
நாடர்நமக்கொருவாழ்வுதந்தால் வந்துபாடுமின்
ஆடும்கருளக்கொடியுடையார் வந்தருள்செய்து
கூடுவராயிடில் கூவிநும்பாட்டுகள்கேட்டுமே. 5
602 கணமாமயில்காள்! கண்ணபிரான்திருக்கோலம்போன்று
அணிமாநடம்பயின் றாடுகின்றீர்க்கு அடிவீழ்கின்றேன்
பணமாடரவணைப் பற்பலகாலமும்பள்ளிகொள்
மணவாளர் நம்மைவைத்த பரிசிதுகாண்மினே. 6
603 நடமாடித் தோகைவிரிக்கின்ற மாமயில்காள்! உம்மை
நடமாட்டங்காணப் பாவியேன்நானோர்முதலிலேன்
குடமாடுகூத்தன் கோவிந்தன்கோமிறைசெய்து எம்மை
உடைமாடுகொண்டான் உங்களுக்கினியொன்றுபோதுமே. 7
604 மழையே! மழையே! மண்புறம்பூசி உள்ளாய்நின்று
மெழுகூற்றினாற்போல் ஊற்றுநல்வேங்கடத் துள்நின்ற
அழகப்பிரானார் தம்மை என்நெஞ்சத்தகப்படத்
தழுவநின்று என்னைத் ததைத்துக்கொண்டூ ஊற்றவும்வல்லையே. (2) 8
605 கடலே! கடலே! உன்னைக்கடைந்துகலக்குறுத்து
உடலுள்புகுந்து நின்றூறலறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்துநின்றூறலறுக்கின்றமாயற்கு என்
நடலைகளெல்லாம் நாகணைக்கேசென்றுரைத்தியே. 9
606 நல்லஎன்தோழி! நாகணைமிசைநம்பரர்
செல்வர்பெரியர் சிறுமானிடவர்நாம்செய்வதென்?
வில்லிபுதுவைவிட்டுசித்தர் தங்கள்தேவரை
வல்லபரிசுவருவிப்பரேல் அதுகாண்டுமே. (2) 10
[…] […]