எட்டாம் திருமொழி – மன்னுபுகழ்

சக்கரவர்த்தித்திருமகனைக்கௌசலையார்தாலாட்டும்பாசுரம்

719 மன்னுபுகழ்கௌசலைதன் மணிவயிறுவாய்த்தவனே!
தென்னிலங்கைகோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்
கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபுரத்தென்கருமணியே!
என்னுடையஇன்னமுதே! இராகவனே! தாலேலோ. (2) 1

720 புண்டரிகமலரதன்மேல் புவனியெல்லாம்படைத்தவனே!
திண்டிறலாள்தாடகைதன் உரமுருவச்சிலைவளைத்தய்!
கண்டவர்தம்மனம்வழங்கும் கணபுரத்தென்கருமணியே!
எண்டிசையுமாளுடையாய்! இராகவனே! தாலேலோ. 2

721 கொங்குமலிகருங்குழலாள் கோசலைதன்குலமதலாய்!
தங்குபெரும்புகழ்ச்சனகன் திருமருகாதாசரதீ!
கங்கையிலும்தீர்த்தமலி கணபுரத்தென்கருமணியே!
எங்கள்குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ. 3

722 தாமரைமேலயனவனைப் படைத்தவனே! தயரதன்தன்
மாமதலாய்! மைதிலிதன்மணவாளா! வண்டினங்கள்
காமரங்களிசைபாடும் கணபுரத்தென்கருமணியே!
ஏமருவும்சிலைவலவா! இராகவனே! தாலேலோ. 4

723 பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி
ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே
சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே
தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ 5

724 சுற்றமெல்லாம்பின்தொடரத்தொல்கானமடைந்தவனே!
அற்றவர்கட்கருமருந்தே! அயோத்திநகர்க்கதிபதியே!
கற்றவர்கள்தாம்வாழும் கணபுரத்தென்கருமணியே!
சிற்றவைதன்சொல்கொண்ட சீராமா! தாலேலோ. 6

725 ஆலினிலைப்பாலகனாய் அன்றுலகமுண்டவனே!
வாலியைகொன்று அரசுஇளையவானரத்துக்களித்தவனே!
காலின்மணிகரையலைக்கும் கணபுரத்தென்கருமணியே!
ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ. 7

726 மலையதனாலணைகட்டி மதிளிலங்கையழித்தவனே!
அலைகடலைக்கடைந்து அமரர்க்கமுதருளிச்செய்தவனே!
கலைவலவர்தாம்வாழும் கணபுரத்தென்கருமணியே!
சிலைவலவா! சேவகனே! சீராம! தாலேலோ. (2) 8

727 தளையவிழும்நறுங்குஞ்சித் தயரதன்றன்குலமதலாய்!
வளையவொருசிலையதனால் மதிளிலங்கையழித்தவனே!
களைகழுநீர்மருங்கலரும் கணபுரத்தென்கருமணியே!
இளையவர்கட்கருளுடையாய்! இராகவனே! தாலேலோ. 9

728 தேவரையுமசுரரையும் திசைகளையும்படைத்தவனே!
யாவரும்வந்தடிவணங்க அரங்கநகர்த்துயின்றவனே!
காவிரிநல்நதிபாயும் கணபுரத்தென்கருமணியே!
ஏவரிவெஞ்சிலைவலவா! இராகவனே! தாலேலோ. (2) 10

729 கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபுரத்தென்காகுத்தன்!
தன்னடிமேல் தாலேலோஎன்றுரைத்த தமிழ்மாலை
கொல்நவிலும்வேல்வலவன் குடைக்குலசேகரஞ்சொன்ன
பன்னியநூல்பத்தும்வல்லார் பாங்காயபத்தர்களே (2) 11

1 thought on “எட்டாம் திருமொழி – மன்னுபுகழ்”

Leave a Reply