விற்றுவக்கோட்டம்மானிடம்வேறுகதியில்லைஎன்றுஆழ்வார்தெரிவித்தல்
688 தருதுயரம்தடாயேல் உன்சரணல்லால்சரணில்லை
விரைகுழுவுமலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே!
அரிசினத்தாலீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தேயழும் குழவிஅதுவேபோன்றிருந்தேனே. (2) 1
689 கண்டாரிகழ்வனவே காதலன்தான்செய்திடினும்
கொண்டானையல்லால் அறியாக்குலமகள்போல்
விண்டோய்மதிள்புடைசூழ் விற்றுவக்கோட்டம்மா! நீ
கொண்டாளாயாகிலும் உன்குரைகழலேகூறுவனே. 2
690 மீன்நோக்கும்நீள்வயல்சூழ் விற்றுவக்கோட்டம்மா! என்
பால்நோக்காயாகிலும் உன்பற்றல்லால்பற்றில்லேன்
தான்நோக்காது எத்துயரம்செய்திடினும் தார்வேந்தன்
கோல்நோக்கிவாழும் குடிபோன்றிருந்தேனே. 3
691 வாளாலறுத்துச்சுடினும் மருத்துவன்பால்
மாளாதகாதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத்துயர்தரினும் விற்றுவக்கோட்டம்மா! நீ
ஆளாவுனதருளே பார்ப்பனடியேனே. 4
692 வெங்கண்திண்களிறடர்த்தாய்! விற்றுவக்கோட்டம்மானே!
எங்குப்போயுய்கேன்? உன்னிணையடியேயடையலல்லால்
எங்கும்போய்க்கரைகாணாது எறிகடல்வாய்மீண்டேயும்
வங்கத்தின்கூம்பேறும் மாப்பறவைபோன்றேனே. 5
693 செந்தழலேவந்து அழலைச்செய்திடினும் செங்கமலம்
அந்தரஞ்சேர்வெங்கதிரோற்கல்லால் அலராவால்
வெந்துயர்வீட்டாவிடினும் விற்றுவக்கோட் டம்மா! உன்
அந்தமில்சீர்க்கல்லால் அகங்குழையமாட்டேனே. 6
694 எத்தனையும் வான்மறந்தகாலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்தமாமுகிலே பார்த்திருக்கும்மற்றவைபோல்
மெய்த்துயர்வீட்டாவிடினும் விற்றுவக்கோட்டம்மா! என்
சித்தம்மிகவுன்பாலே வைப்பனடியேனே. 7
695 தொக்கிலங்குயாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
புக்கன்றிப்புறம்நிற்கமாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்குமுகில்நிறத்தாய்! விற்றுவக்கோட்டம்மா! உன்
புக்கிலங்குசீரல்லால் புக்கிலன்காண்புண்ணியனே! 8
696 நின்னையேதான்வேண்டி நீள்செல்வம்வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையேசேர்திகிரி விற்றுவக்கோட்டம்மா!
நின்னையேதான்வேண்டி நிற்பனடியேனே. 9
697 விற்றுவக்கோட்டம்மா! நீவேண்டாயேயாயிடினும்
மற்றாரும்பற்றிலேனென்று அவனைத்தாள்நயந்த
கொற்றவேல்தானைக் குலசேகரன்சொன்ன
நற்றமிழ்பத்தும்வல்லார் நண்ணார்நரகமே. (2) 10
[…] ஐந்தாம் திருமொழி – தருதுயரந்தடாயேல… […]