01.105 பாடலன் நான்மறையன்

தலம் : ஆரூர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : புற்றிடங்கொண்டார்;
அம்பாள் : கமலாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

பாடலன் நான்மறையன் படிபட்ட
கோலத்தன் திங்கள்
சூடலன் மூவிலைய
சூலம் வலனேந்திக்
கூடலர் மூவெயிலும் எரியுண்ணக்
கூரெரிகொண் டெல்லி
ஆடலன் ஆதிரையன்
ஆரூர் அமர்ந்தானே. 1

சோலையில் வண்டினங்கள் சுரும்போ
டிசைமுரலச் சூழ்ந்த
ஆலையின் வெம்புகைபோய்
முகில்தோயும் ஆரூரில்
பாலொடு நெய்தயிரும்
பயின்றாடும் பரமேட்டி பாதம்
காலையும் மாலையும்போய்ப்
பணிதல் கருமமே. 2

உள்ளமோர் இச்சையினால் உகந்தேத்தித்
தொழுமின்தொண்டீர் மெய்யே
கள்ளம் ஒழிந்திடுமின்
கரவா திருபொழுதும்
வெள்ளமோர் வார்சடைமேற் கரந்திட்ட
வெள்ளேற்றான் மேய
அள்ளல் அகன்கழனி
ஆரூர் அடைவோமே. 3

வெந்துறு வெண்மழுவாட் படையான்
மணிமிடற்றான் அரையின்
ஐந்தலை யாடரவம்
அசைத்தான் அணியாரூர்ப்
பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன்
அடிபரவப் பாவம்
நைந்தறும் வந்தணையும்
நாடொறும் நல்லனவே. 4

வீடு பிறப்பெளிதாம் அதனை
வினவுதிரேல் வெய்ய
காடிட மாகநின்று
கனலேந்திக் கைவீசி
ஆடும் அவிர்சடையான் அவன்மேய
ஆரூரைச் சென்று
பாடுதல் கைதொழுதல்
பணிதல் கருமமே. 5

கங்கையோர் வார்சடைமேற் கரந்தான்
கிளிமழலைக் கேடில்
மங்கையோர் கூறுடையான்
மறையான் மழுவேந்தும்
அங்கையி னான்அடியே பரவி
யவன்மேய ஆரூர்
தங்கையினாற் றொழுவார்
தடுமாற் றறுப்பாரே. 6

நீறணி மேனியனாய் நிரம்பா
மதிசூடி நீண்ட
ஆறணி வார்சடையான்
ஆரூர் இனிதமர்ந்தான்
சேறணி மாமலர்மேல் பிரமன்
சிரமரிந்த செங்கண்
ஏறணி வெல்கொடியான்
அவனெம் பெருமானே. 7

(*) இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 8

வல்லியந் தோலுடையான் வளர்திங்கள்
கண்ணியினான் வாய்த்த
நல்லியல் நான்முகத்தோன்
தலையின் னறவேற்றான்
அல்லியங் கோதைதன்னை ஆகத்
தமர்ந்தருளி ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத்
தொழுவாரும் புண்ணியரே. 9

செந்துவர் ஆடையினார் உடைவிட்டு
நின்றுழல்வார் சொன்ன
இந்திர ஞாலமொழிந்
தின்புற வேண்டுதிரேல்
அந்தர மூவெயிலு மரணம்
எரியூட்டி ஆரூர்த்
தந்திர மாவுடையான்
அவனெந் தலைமையனே. 10

நல்ல புனற்புகலித் தமிழ்ஞான
சம்பந்தன் நல்ல
அல்லி மலர்க்கழனி
ஆரூர் அமர்ந்தானை
வல்லதோ ரிச்சையினால் வழிபாடிவை
பத்தும் வாய்க்கச்
சொல்லுதல் கேட்டல்வல்லார்
துன்பந் துடைப்பாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Reply