ஒன்பதாம் திருமொழி – வட்டநடுவே

தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்

108) வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல்
சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத்துளிக்க என்
குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான். (2)

109) கிங்கிணிகட்டிக் கிறிகட்டி கையினில்
கங்கணமிட்டுக் கழுத்தில்தொடர்கட்டி
தன்கணத்தாலே சதிராநடந்துவந்து
என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான் எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்.

110) கத்தக்கதித்துக் கிடந்தபெருஞ்செல்வம்
ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான்
கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் ஆயர்களேறுஎன்புறம்புல்குவான்.

111) நாந்தகமேந்திய நம்பிசரணென்று
தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன்மணித்திண்தேர்
ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான் உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்.

112) வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடி
கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ்
பண்பலபாடிப் பல்லாண்டிசைப்ப பண்டு
மண்பலகொண்டான்புறம்புல்குவான் வாமனன்என்னைப்புறம்புல்குவான்.

113) சத்திரமேந்தித் தனியொருமாணியாய்
உத்தரவேதியில் நின்றஒருவனை
கத்திரியர்காணக் காணிமுற்றும்கொண்ட
பத்திராகாரன்புறம்புல்குவான் பாரளந்தான்என்புறம்புல்குவான்.

114) பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி
தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும்
மெத்தத்திருவயிறார விழுங்கிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் ஆழியான்என்னைப்புறம்புல்குவான்.

115) மூத்தவைகாண முதுமணற்குன்றேறி
கூத்துஉவந்தாடிக் குழலால்இசைபாடி
வாய்த்தமறையோர் வணங்க இமையவர்
ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான் எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்.

116) கற்பகக்காவு கருதியகாதலிக்கு
இப்பொழுதுஈவனென்று இந்திரன்காவினில்
நிற்பனசெய்து நிலாத்திகழ்முற்றத்துள்
உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான் உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்.

117) ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கிய
வேய்த்தடந்தோளிசொல் விட்டுசித்தன்மகிழ்ந்து
ஈத்ததமிழிவை ஈரைந்தும்வல்லவர்
வாய்த்தநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. (2)

1 thought on “ஒன்பதாம் திருமொழி – வட்டநடுவே”

Leave a Reply