முதல்திருமொழி – மெச்சூது

பூச்சிகாட்டி விளையாடுதல்

118) மெச்சூதுசங்கம்இடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில்தோற்ற பொறையுடைமன்னர்க்காய்
பத்தூர்பெறாதுஅன்று பாரதம்கைசெய்த
அத்தூதன்அப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான். (2)

119) மலைபுரைதோள்மன்னவரும் மாரதரும்மற்றும்
பலர்குலைய நூற்றுவரும்பட்டழிய பார்த்தன்
சிலைவளையத் திண்தேர்மேல்முன்னின்ற செங்கண்
அலவலைவந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.

120) காயும்நீர்புக்குக் கடம்பேறி காளியன்
தீயபணத்தில் சிலம்பார்க்கப்பாய்ந்தாடி
வேயிங்குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.

121) இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர்
மருட்டைத்தவிர்ப்பித்து வன்கஞ்சன்மாளப்
புரட்டி அந்நாள்எங்கள் பூம்பட்டுக்கொண்ட
அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.

122) சேப்பூண்ட சாடுசிதறி திருடிநெய்க்கு
ஆப்பூண்டு நந்தன்மனைவிகடைதாம்பால்
சோப்பூண்டு துள்ளித்துடிக்க அன்று
ஆப்பூண்டான்அப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.

123) செப்பிளமென்முலைத் தேவகிநங்கைக்கு
சொப்படத்தோன்றித் தொறுப்பாடியோம்வைத்த
துப்பமும்பாலும் தயிரும்விழுங்கிய
அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.

124) தத்துக்கொண்டாள்கொலோ? தானேபெற்றாள்கொலோ?
சித்தமனையாள் அசோதையிளஞ்சிங்கம்
கொத்தார்கருங்குழல் கோபாலகோளரி
அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.

125) கொங்கை வன்கூனிசொற்கொண்டு குவலயத்
துங்கக்கரியும் பரியும்இராச்சியமும்
எங்கும்பரதற்கருளி வன்கானடை
அங்கண்ணன்அப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.

126) பதகமுதலைவாய்ப் பட்டகளிறு
கதறிக்கைகூப்பி என்கண்ணா! கண்ணா! வென்ன
உதவப்புள்ளூர்ந்து அங்குஉறுதுயர்தீர்த்த
அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.

127) வல்லாளிலங்கைமலங்கச் சரந்துரந்த
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த
சொல்லார்ந்த அப்பூச்சிப்பாடல்இவைபத்தும்
வல்லார்போய் வைகுந்தம் மன்னியிருப்பரே. (2)

1 thought on “முதல்திருமொழி – மெச்சூது”

Leave a Reply