பன்னிரண்டாம் திருமொழி : மற்றிருந்தீர்கட்கு

தலைவிகண்ண்னுள்ளவிடத்திற்கொண்டுவிடும்படி உற்றாரைவேண்டுதல்

617 மற்றிருந்தீர்கட்கறியலாகா
மாதவனென்பதோரன்புதன்னை
உற்றிருந்தேனுக்குரைப்பதெல்லாம்
ஊமையரோடுசெவிடர்வார்த்தை
பெற்றிருந்தாளையொழியவேபோய்ப்
பேர்த்தொருதாயில்வளர்ந்தநம்பி
மற்பொருந்தாமற்களமடைந்த
மதுரைப்புறத்தென்னையுய்த்திடுமின். (2) 1

618 நாணியினியோர்கருமமில்லை
நாலயலாரும்அறிந்தொழிந்தார்
பாணியாதென்னைமருந்துசெய்து
பண்டுபண்டாக்கவுறுதிராகில்
மாணியுருவாயுலகளந்த
மாயனைக்காணில்தலைமறியும்
ஆணையால்நீரென்னைக்காக்கவேண்டில்
ஆய்ப்பாடிக்கேயென்னையுய்த்திடுமின். 2

619 தந்தையும்தாயுமுற்றாரும்நிற்கத்
தனிவழிபோயினாள்என்னும்சொல்லு
வந்தபின்னைப்பழிகாப்பரிது
மாயவன்வந்துருக்காட்டுகின்றான்
கொந்தளமாக்கிப்பரக்கழித்துக்
குறும்புசெய்வானோர்மகனைப்பெற்ற
நந்தகோபாலன்கடைத்தலைக்கே
நள்ளிருட்கணென்னையுய்த்திடுமின். 3

620 அங்கைத்தலத்திடையாழிகொண்டான்
அவன்முகத்தன்றிவிழியேனென்று
செங்கச்சுக்கொண்டுகண்ணாடையார்த்துச்
சிறுமானிடவரைக்காணில்நாணும்
கொங்கைத்தலமிவைநோக்கிக்காணீர்
கோவிந்தனுக்கல்லால்வாயில்போகா
இங்குத்தைவாழ்வையொழியவேபோய்
யமுனைக்கரைக்கென்னையுய்த்திடுமின். 4

621 ஆர்க்குமென்நோயிதறியலாகாது
அம்மனை மீர்! துழதிப்படாதே
கார்க்கடல் வண்ணனென்பானொருவன்
கைகண்டயோகம்தடவத்தீரும்
நீர்க்கரைநின்றகடம்பையேறிக்
காளியனுச்சியில்நட்டம்பாய்ந்து
போர்க்களமாகநிருத்தஞ்செய்த
பொய்கைக்கரைக்கென்னையுய்த்திடுமின். 5

622 கார்த்தண்முகிலும்கருவிளையும்
காயாமலரும்கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றனவென்னைவந்திட்டு
இருடீகேசன்பக்கல்போகேயென்று
வேர்த்துப்பசித்துவயிறசைந்து
வேண்டடிசிலுண்ணும்போது ஈதென்று
பார்த்திருந்துநெடுநோக்குக்கொள்ளும்
பத்தவிலோசநத்துய்த்திடுமின். 6

623 வண்ணம்திரிவும்மனங்குழைவும்
மானமிலாமையும்வாய்வெளுப்பும்
உண்ணலுறாமையுமுள்மெலிவும்
ஓதநீர்வண்ணனென்பானொருவன்
தண்ணந்துழாயென்னும்மாலைகொண்டு
சூட்டத்தணியும் பிலம்பன்றன்னைப்
பண்ணழியப்பலதேவன்வென்ற
பாண்டிவடத்தென்னையுய்த்திடுமின். 7

624 கற்றினம்மேய்க்கிலும்மேய்க்கப்பெற்றான்
காடுவாழ்சாதியுமாகப்பெற்றான்
பற்றியுரலிடையாப்புமுண்டான்
பாவிகாள்! உங்களுக்கேச்சுக்கொலோ?
கற்றனபேசிவசையுணாதே
காலிகளுய்யமழைதடுத்து
கொற்றக்குடையாகவேந்திநின்ற
கோவர்த்தனத்தென்னையுய்த்திடுமின். 8

625 கூட்டிலிருந்துகிளியெப்போதும்
கோவிந்தா! கோவிந்தா! என்றழைக்கும்
ஊட்டுக்கொடாதுசெறுப்பனாகில்
உலகளந்தான்என் றுயரக்கூவும்
நாட்டில்தலைப்பழியெய்தியுங்கள்
நன்மையிழந்துதலையிடாதே
சூட்டுயர்மாடங்கள்சூழ்ந்துதோன்றும்
துவராபதிக்கென்னையுய்த்திடுமின். 9

626 மன்னுமதுரைதொடக்கமாக
வண்துவராபதிதன்னளவும்
தன்னைத்தமருய்த்துப்பெய்யவேண்டித்
தாழ்குழலாள்துணிந்ததுணிவை
பொன்னியல்மாடம்பொலிந்துதோன்றும்
புதுவையர்கோன்விட்டுசித்தன்கோதை
இன்னிசையால்சொன்னசெஞ்சொல்மாலை
ஏத்தவல்லார்க்கிடம் வைகுந்தமே. (2) 10

1 thought on “பன்னிரண்டாம் திருமொழி : மற்றிருந்தீர்கட்கு”

Leave a Reply