ஆறாம் திருமொழி – ஏர்மலர்ப்பூங்குழல்

ஆய்ச்சியர் ஊடி அமலனை எள்கியுரைத்தல்

698 ஏர்மலர்ப்பூங்குழலாயர்மாதர்
எனைப்பலருள்ளவிவ்வூரில் உன்தன்
மார்வுதழுவுதற்காசையின்மைஅறிந்தறிந்தே
உன்தன்பொய்யைக்கேட்டு
கூர்மழைபோல்பனிக்கூதலெய்திக்
கூசிநடுங்கியமுனையாற்றில்
வார்மணற்குன்றில்புலரநின்றேன்
வாசுதேவா! உன்வரவுபார்த்தே. (2) 1

699 கெண்டையொண்கண்மடவாளொருத்தி
கீழையகத்துத்தயிர்கடையக்
கண்டு ஒல்லைநானும்கடைவனென்று
கள்ளவிழியைவிழித்துப்புக்கு
வண்டமர்பூங்குழல்தாழ்ந்துலாவ
வாண்முகம்வேர்ப்பச்செவ்வாய்த்துடிப்ப
தண்டயிர்நீகடைந்திட்டவண்ணம்
தாமோதரா! மெய்யறிவன்நானே. 2

700 கருமலர்க்கூந்தலொருத்திதன்னைக்
கடைக்கணித்து ஆங்கேயொருத்திதன்பால்
மருவிமனம்வைத்துமற்றொருத்திக்குரைத்து
ஒருபேதைக்குப்பொய்குறித்து
புரிகுழல்மங்கையொருத்திதன்னைப்
புணர்திஅவளுக்கும்மெய்யனல்லை
மருதிறுத்தாய்! உன்வளர்த்தியூடே
வளர்கின்றதாலுன்றன்மாயைதானே. 3

701 தாய்முலைப்பாலிலமுதிருக்கத்
தவழ்ந்துதளர்நடையிட்டுச்சென்று
பேய்முலைவாய்வைத்துநஞ்சையுண்டு
பித்தனென்றேபிறரேசநின்றாய்
ஆய்மிகுகாதலோடுயானிருப்ப
யான்விடவந்தஎன்தூதியோடே
நீமிகுபோகத்தைநன்குகந்தாய்
அதுவுமுன்கோரம்புக்கேற்குமன்றே. 4

702 மின்னொத்தநுண்ணிடையாளைக்கொண்டு
வீங்கிருள்வாயென்றன்வீதியூடே
பொன்னொத்தவாடைகுக்கூடலிட்டுப்
போகின்றபோதுநான்கண்டுநின்றேன்
கண்ணுற்றவளைநீகண்ணாலிட்டுக்
கைவிளிக்கின்றதும்கண்டேநின்றேன்
என்னுக்கவளைவிட்டிங்குவந்தாய் ?
இன்னமங்கேநடநம்பி! நீயே. 5

703 மற்பொருதோளுடைவாசுதேவா!
வல்வினையேன்துயில்கொண்டவாறே
இற்றையிரவிடையேமத்தென்னை
இன்னணைமேலிட்டகன்றுநீபோய்
அற்றையிரவுமோர்பிற்றைநாளும்
அரிவையரோடும்அணைந்துவந்தாய்
எற்றுக்குநீயென்மருங்கில்வந்தாய் ?
எம்பெருமான்! நீயெழுந்தருளே. 6

704 பையரவின்னணைப்பள்ளியினாய்!
பண்டையோமல்லோம்நாம் நீயுகக்கும்
மையரியொண்கண்ணினாருமல்லோம்
வைகியெம்சேரிவரவொழிநீ
செய்யவுடையும்திருமுகமும்
செங்கனிவாயும்குழலும்கண்டு
பொய்யொருநாள்பட்டதேயமையும்
புள்ளுவம்பேசாதேபோகுநம்பீ! 7

705 என்னைவருகவெனக்குறித்திட்டு
இனமலர்முல்லையின்பந்தர்நீழல்
மன்னியவளைப்புணரப்புக்கு
மற்றென்னைக்கண்டுழறாநெகிழ்ந்தாய்
பொன்னிறவாடையைக்கையில்தாங்கிப்
பொய்யச்சங்காட்டிநீபோதியேலும்
இன்னமென்கையகத்தீங்கொருநாள்வருதியேல்
என்சினம்தீர்வன்நானே. 8

706 மங்கலநல்வனமாலைமார்விலிலங்க
மயில்தழைப்பீலிசூடி
பொங்கிளவாடையரையில்சாத்திப்
பூங்கொத்துக்காதிற்புணரப்பெய்து
கொங்குநறுங்குழலார்களோடு
குழைந்துகுழலினிதூதிவந்தாய்
எங்களுக்கேயொருநாள்வந்தூத
உன்குழலின்னிசைபோதராதே. 9

707 அல்லிமலர்த்திருமங்கைகேள்வன்தன்னை
நயந்திளவாய்ச்சிமார்கள்
எல்லிப்பொழுதினிலேமத்தூடி
எள்கியுரைத்தவுரையதனை
கொல்லிநகர்க்கிறைகூடற்கோமான்
குலசேகரனின்னிசையில்மேவி
சொல்லியவின்தமிழ்மாலைபத்தும்
சொல்லவல்லார்க்கில்லைதுன்பந்தானே. (2) 10

1 thought on “ஆறாம் திருமொழி – ஏர்மலர்ப்பூங்குழல்”

Leave a Reply